நக்சல் ஆதிக்கத்தில் இருந்து நாடு முழுமையாக விடுபட்டுள்ளதாக மத்திய உள்துறை இணை அமைச்சர் நித்தியானந்த் ராய் ராஜ்யசபாவில் தெரிவித்துள்ளார்.
ராஜ்யசபாவில் உறுப்பினர் ஒருவர் எழுப்பிய கேள்விக்கு எழுத்துப்பூர்வமாக பதிலளித்த அவர், ஒரு காலத்தில் நாட்டின் உள்நாட்டு பாதுகாப்புக்கு மிகப்பெரிய அச்சுறுத்தலாக இருந்த நக்சல் வன்முறை, கடந்த 60 ஆண்டுகளுக்குப் பிறகு முழுமையாக கட்டுப்படுத்தப்பட்டுள்ளதாக குறிப்பிட்டார்.
2015-ஆம் ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்ட நக்சலைட் அமைப்புகளை எதிர்கொள்ளும் தேசியக் கொள்கை மற்றும் செயல்திட்டம், மத்திய மற்றும் மாநில அரசுகளின் ஒருங்கிணைந்த நடவடிக்கைகளுடன் தீவிரமாக செயல்படுத்தப்பட்டதன் விளைவாக இந்த முன்னேற்றம் ஏற்பட்டதாக அமைச்சர் தெரிவித்தார்.
நக்சல் பாதிப்பு மாவட்டங்களின் எண்ணிக்கை தொடர்ந்து குறைந்து வந்ததாகவும், 2018 ஏப்ரலில் 90 மாவட்டங்களாக இருந்த எண்ணிக்கை, 2021-ல் 70 ஆகவும், 2024-ல் 38 ஆகவும், 2025 டிசம்பரில் 8 ஆகவும் குறைந்த நிலையில், 2026 மார்ச் மற்றும் ஏப்ரல் மாதங்களில் அது பூஜ்ஜியமாக மாறியுள்ளதாக அவர் கூறினார்.
மேலும், தற்போது 37 மாவட்டங்கள் “Legacy & Thrust” மாவட்டங்களாக வகைப்படுத்தப்பட்டுள்ளன. இந்த மாவட்டங்களில் நக்சல் வன்முறை கட்டுப்பாட்டுக்குள் வந்துள்ள நிலையில், பாதுகாப்பு மற்றும் வளர்ச்சி நடவடிக்கைகள் தொடர்ந்து மேற்கொள்ளப்படுகின்றன என்று அமைச்சர் விளக்கமளித்தார்.
அதேபோல், ஒரு மாவட்டம் மட்டும் “கவலைக்குரிய மாவட்டம்” என வகைப்படுத்தப்பட்டுள்ளதாகவும், அங்கு இடதுசாரி தீவிரவாதத்தின் அமைப்புசார் செயல்பாடுகள் பெருமளவில் சிதைக்கப்பட்டுள்ளதால், மீண்டும் நக்சல் ஆதிக்கம் உருவாகாத வகையில் பாதுகாப்பு கண்காணிப்பு மற்றும் வளர்ச்சித் திட்டங்கள் தொடரும் என்றும் அவர் தெரிவித்தார்.
