திருச்சி,
தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் மீது தேர்தல் நடத்தை விதிமீறல் குற்றச்சாட்டை முன்வைத்து, இந்திய தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தியுள்ளது.
திருச்சி கிழக்கு தொகுதியில் போட்டியிடும் விஜய், தனது தேர்தல் பிரசாரத்தின் ஒரு பகுதியாக பல்வேறு மதத்தலங்களுக்கு சென்றார். வயர்லஸ் சாலை பகுதியில் உள்ள புனித அந்தோணியார் தேவாலயம், கே.கே. நகரில் உள்ள பள்ளிவாசல் மற்றும் கொட்டப்பட்டு பகுதியில் உள்ள ஸ்ரீபச்சநாச்சி அம்மன் கோயிலில் அவர் வழிபாடு செய்தார்.
தேவாலயத்தில் அவர் முழங்கால் போட்டு பிரார்த்தனை செய்த காட்சிகள் சமூக ஊடகங்களில் பரவின.
இந்த நிலையில், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி செயலாளர் பெ. சண்முகம் வெளியிட்ட அறிக்கையில், தேர்தல் நடத்தை விதிகளின்படி மதத்தலங்களில் கட்சி அடையாளங்களை வெளிப்படுத்தும் வகையில் நடந்து கொள்ளக் கூடாது என குறிப்பிடப்பட்டுள்ளது.
இதனை மீறியிருக்கலாம் எனக் கூறி, இந்த விவகாரம் குறித்து தேர்தல் ஆணையம் விசாரணை நடத்தி உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.
மேலும், இந்த சம்பவம் தேர்தல் நோக்கத்துடன் செய்யப்பட்டதாக சந்தேகம் இருப்பதாகவும் அவர் தனது கருத்தை பதிவு செய்துள்ளார்.
