சென்னை: தமிழகத்திற்கு தேசிய கல்விக் கொள்கை தேவையில்லை என்றும், மாநில பாடத்திட்டமே மாணவர்களுக்கு போதுமானதாகவும் சிறந்ததாகவும் உள்ளது என்றும் பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் ராஜ்மோகன் தெரிவித்துள்ளார்.
சென்னை சிந்தாதிரிப்பேட்டையில் உள்ள தனுக்கோடி நடுநிலைப் பள்ளியில் புதிதாக சேர்ந்த மாணவர்களை வரவேற்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் பங்கேற்ற அமைச்சர் ராஜ்மோகன், மாணவர்களுக்கு மலர் மாலை அணிவித்து இனிப்புகள் வழங்கினார். மேலும், இலவச பாடப்புத்தகங்கள், சீருடைகள் உள்ளிட்ட கல்வி உபகரணங்களையும் வழங்கினார்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், தமிழக அரசு பள்ளிகளில் இந்த கல்வியாண்டில் 4 லட்சம் மாணவர்களை சேர்க்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார். இதுவரை 1 லட்சத்து 52 ஆயிரத்து 625 மாணவ, மாணவியர்கள் அரசு பள்ளிகளில் சேர்ந்துள்ளதாகவும் கூறினார்.
அமைச்சராக பொறுப்பேற்றவுடன் அரசு பள்ளிகளில் குடிநீர் வசதி, பாதுகாப்பான கழிப்பறைகள் உள்ளிட்ட அடிப்படை உள்கட்டமைப்புகளை மேம்படுத்துவது மற்றும் பெரம்பலூரில் உள்ள மாதிரி பள்ளிக்கு புதிய கட்டடம் அமைப்பது தொடர்பான கோப்புகளில்தான் முதல் கையெழுத்திட்டதாகவும் அவர் தெரிவித்தார்.
ஆசிரியர் பற்றாக்குறையை போக்க நிலுவையில் உள்ள வழக்குகளை விரைவாக முடிக்க அனைத்து முயற்சிகளும் மேற்கொள்ளப்படும் என்றும் கூறினார்.
இருமொழிக் கொள்கை த.வெ.க.வின் அடிப்படை கொள்கையாக இருப்பதாக குறிப்பிட்ட அவர், தமிழ்த்தாய் வாழ்த்துக்கு சட்டப்பூர்வ அங்கீகாரம் வழங்கும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் தெரிவித்தார்.
மேலும், உதவிபெறும் பள்ளிகளில் ஆங்கில வழிக் கல்வியை வலுப்படுத்தவும், மாணவர்கள் ஆங்கில மொழியை எளிதில் புரிந்துகொள்ளும் வகையில் சிறப்பு பயிற்சிகள் வழங்கப்பட உள்ளதாகவும் கூறினார்.
மாநில கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி மன்றமான எஸ்.சி.இ.ஆர்.டி. தொடக்கப் பள்ளி மாணவர்களுக்காக வடிவமைத்துள்ள 1, 2 மற்றும் 3-ம் வகுப்பு பாடப்புத்தகங்கள் மிகவும் சிறப்பாக உள்ளதாக அமைச்சர் பாராட்டினார். அந்தப் புத்தகங்களில் இடம்பெற்றுள்ள வண்ணமயமான படங்கள் குழந்தைகளை கவரும் வகையில் இருப்பதாகவும் தெரிவித்தார்.
இதனைத் தொடர்ந்து, “தேசிய கல்விக் கொள்கை எல்லாம் தமிழகத்திற்கு தேவையில்லை. எஸ்.சி.இ.ஆர்.டி.யின் பங்களிப்புடன் உருவாக்கப்பட்ட மாநில பாடத்திட்டமே சிறந்தது. அதுவே மாணவர்களுக்கு போதுமானது” என்று அமைச்சர் ராஜ்மோகன் கூறினார்.
