சென்னை: தமிழக சட்டசபை தேர்தலை முன்னிட்டு, அதிமுக தலைமையிலான தேசிய ஜனநாயக (தே.ஜ.) கூட்டணியில் பாஜ, பாமக, அமமுக உள்ளிட்ட கட்சிகளுக்கான தொகுதி பங்கீடு அறிவிக்கப்பட்டுள்ளது.
அதன்படி, பாஜவுக்கு 27 தொகுதிகள், பாமகவுக்கு 18 தொகுதிகள், அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளதாக அதிமுக பொதுச்செயலாளர் பழனிசாமி தெரிவித்துள்ளார். தமாகா உள்ளிட்ட மற்ற கூட்டணி கட்சிகளுடன் தொடர்ந்து பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது.
தொகுதி பங்கீடு தொடர்பாக மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவுடன் பல கட்டங்களாக பேச்சு நடந்தது. கடந்த 19ம் தேதி டில்லியில் நடந்த சந்திப்பில் உடன்பாடு எட்டப்பட்டதைத் தொடர்ந்து, மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் சென்னை வந்து இறுதி பேச்சுவார்த்தையில் ஈடுபட்டார்.
சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் நடைபெற்ற ஆலோசனையில், பியூஷ் கோயல், நயினார் நாகேந்திரன், எல்.முருகன், தமிழிசை, அன்புமணி, தினகரன் உள்ளிட்ட கூட்டணி தலைவர்கள் கலந்து கொண்டனர். பின்னர், ஒவ்வொரு கட்சிக்கும் ஒதுக்கப்பட்ட தொகுதிகளை பழனிசாமி அறிவித்தார்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், “எங்கள் கூட்டணியில் தொகுதி பங்கீடு சுமுகமாக நடந்துள்ளது. இன்னும் சில கட்சிகளுடன் பேச்சு நடைபெற்று வருகிறது. இன்று இரவுக்குள் அனைத்தும் முடிவடையும்” என்றார்.
மேலும், “தே.ஜ. கூட்டணி உணர்வுப்பூர்வமான வெற்றி கூட்டணி. வரும் தேர்தலில் 210 தொகுதிகளில் வெற்றி பெற்று அதிமுக ஆட்சி அமைக்கும்” என நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
டில்லி பயணம் குறித்து விமர்சனம் எழுப்பும் திமுக மீது பதிலளித்த அவர், “கருத்து பரிமாற்றத்திற்காகவே டில்லி செல்கிறோம். ஆனால், நாங்கள் டில்லி சென்றால் ஸ்டாலினுக்கு பயம் ஏற்படுகிறது” என குற்றம்சாட்டினார்.
திமுக கூட்டணியில் 20 நாட்களாக இழுபறி நிலை நீடிக்கிறது என்றும், வி.சி., மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் உள்ளிட்ட கட்சிகளுடன் இன்னும் ஒப்பந்தம் ஆகவில்லை என்றும் அவர் கூறினார்.
தற்போது 56 தொகுதிகள் கூட்டணி கட்சிகளுக்கு ஒதுக்கப்பட்டுள்ள நிலையில், அதிமுக கையில் 178 தொகுதிகள் உள்ளன. வாசன், ஜான் பாண்டியன், பாரிவேந்தர், ஜெகன் மூர்த்தி, ஏ.சி.சண்முகம் உள்ளிட்ட தலைவர்களுடன் தொடர்ந்து பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது.
