“தீண்டாமையை அரசே ஊக்குவிக்கிறதா?” – கம்பூர் சம்பவத்தில் அன்புமணி கண்டனம்
சென்னை: மதுரை மாவட்டம் மேலூர் அருகே கம்பூர் ஊராட்சியில் பட்டியலினத்தைச் சேர்ந்த தூய்மைப் பணியாளருக்கு சாதியக் கொடுமையும், தீண்டாமையும் இழைக்கப்பட்டதாக கூறப்படும் சம்பவத்திற்கு பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் கண்டனம் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கையில், கம்பூர் ஊராட்சியில் தூய்மைப் பணியாளராக பணியாற்றி வரும் சசிகலா, பணியிடத்தில் தனக்கு இழைக்கப்பட்டதாக கூறப்படும் தீண்டாமை மற்றும் சாதியக் கொடுமைகள் காரணமாக தற்கொலைக்கு முயன்றதாகவும், தற்போது மேலூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
தேநீர் குவளை பயன்படுத்த அனுமதி மறுப்பு?
சசிகலா உள்ளிட்ட சில தூய்மைப் பணியாளர்களுக்கு எதிராக தீண்டாமை கடைப்பிடிக்கப்பட்டதாகவும், ஊராட்சி மன்றத்தில் பயன்படுத்தப்படும் பொதுவான தேநீர் குவளைகளை பயன்படுத்த அனுமதி மறுக்கப்பட்டு, காகிதக் குவளைகளை பயன்படுத்துமாறு கட்டாயப்படுத்தப்பட்டதாகவும் குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளதாக அன்புமணி தெரிவித்துள்ளார்.
மேலும், கம்பூர் ஊராட்சி செயலாளராக பணியாற்றும் பெண் ஊழியரின் காலணியை தூக்கி வருமாறு சசிகலா கட்டாயப்படுத்தப்பட்டதாக அவரது கணவர் டி.பிரகாஷ் குற்றஞ்சாட்டியுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
அதிகாரிகளிடம் புகார் அளித்தும் நடவடிக்கை இல்லை?
தனக்கு இழைக்கப்படுவதாக கூறப்படும் தீண்டாமை மற்றும் சாதியக் கொடுமைகள் குறித்து சசிகலா சில மாதங்களுக்கு முன்பே ஊரக வளர்ச்சித்துறை அதிகாரிகள் மற்றும் காவல் துறையிடம் புகார் அளித்ததாக அன்புமணி கூறியுள்ளார்.
அதன் மீது நடவடிக்கை எடுக்கப்படாத நிலையில், மாவட்ட ஆட்சியர் நிஷாந்த் கிருஷ்ணாவிடமும் சசிகலா புகார் அளித்ததாகவும், அங்கும் நடவடிக்கை எடுக்கப்படாததால் அவர் தற்கொலைக்கு முயன்றதாக அவரது கணவர் குற்றஞ்சாட்டியுள்ளதாகவும் அன்புமணி குறிப்பிட்டுள்ளார்.
“அரசு விசாரணை நடத்த வேண்டும்”
பட்டியலின மக்களின் சமூக மற்றும் பொருளாதார முன்னேற்றத்திற்காக பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வரும் நிலையில், அரசு பதவிகளில் இருப்பவர்கள் சமூக நல்லிணக்கத்திற்கு துணை நிற்க வேண்டும் என அன்புமணி வலியுறுத்தியுள்ளார்.
அரசு அதிகாரிகளிடமே புகார் அளிக்கப்பட்ட பின்னரும் நடவடிக்கை எடுக்கப்படாதது ஏற்க முடியாதது என்றும், இதுபோன்ற செயல்பாடுகள் மூலம் “தீண்டாமையை அரசே ஊக்குவிக்கிறதோ?” என்ற சந்தேகம் எழுவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
மேலும், கம்பூர் ஊராட்சி சம்பவம் தொடர்பாக தமிழக அரசு உரிய விசாரணை நடத்தி உண்மை நிலையை வெளிக்கொண்டு வர வேண்டும் என்றும், தவறு செய்தவர்கள் யாராக இருந்தாலும் அவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.
