சென்னை: திரைப்பட தயாரிப்பாளரும் நடிகருமான கே.ராஜன் அடையாறு ஆற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் திரையுலகில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அவருக்கு வயது 85.
1983-ம் ஆண்டு வெளியான ‘பிரம்மச்சாரிகள்’ திரைப்படத்தின் மூலம் தயாரிப்பாளராக அறிமுகமான கே.ராஜன், பின்னர் பல திரைப்படங்களை தயாரித்து தமிழ் திரையுலகில் தனக்கென இடம்பிடித்தார்.
‘நம்ம ஊரு மாரியம்மா’, ‘உணர்ச்சிகள்’ உள்ளிட்ட திரைப்படங்களை இயக்கிய அவர், ‘அவள் பாவம்’, ‘நினைக்காத நாளில்லை’, ‘டபுள்ஸ்’ போன்ற பல படங்களை தயாரித்துள்ளார்.
அதேபோல், ‘பாம்பு சட்டை’, ‘துணிவு’, ‘பரகாசுரன்’ உள்ளிட்ட திரைப்படங்களில் நடிகராகவும் நடித்துள்ளார்.
திரைப்பட விழாக்கள் மற்றும் பொது நிகழ்ச்சிகளில் தொடர்ந்து கலந்து கொண்டு, திரையுலக பிரபலங்களின் செயல்பாடுகளை விமர்சித்து பேசுவதன் மூலம் கே.ராஜன் பரவலாக அறியப்பட்டவர். யூடியூப் சேனல்கள் மற்றும் பொதுமேடைகளிலும் அவர் பல்வேறு கருத்துகளை வெளிப்படுத்தி வந்தார்.
இந்நிலையில், நேற்று அடையாறு ஆற்றில் குதித்து அவர் தற்கொலை செய்து கொண்டதாக தகவல் வெளியாகியுள்ளது.
இதுகுறித்து தகவல் அறிந்த தீயணைப்புத்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று அவரது உடலை மீட்டனர்.
தற்போது, அவரது தற்கொலைக்கான காரணம் குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இதுவரை அதிகாரப்பூர்வ காரணம் எதுவும் வெளியாகவில்லை.
