திருப்பூர் மாவட்டம் வெள்ளகோவில் அருகே நடைபெற்ற சாலை விபத்தில் போலீஸ்காரர் உட்பட 6 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
வெள்ளகோவில் குறுக்குத்தி போலீஸ் செக் போஸ்ட் பகுதியில் இன்று அதிகாலை இந்த விபத்து நடைபெற்றது. தகவலின்படி, செக் போஸ்ட் அருகே வந்த லாரி ஒன்று பேரிகார்டில் மோதி சேதப்படுத்தியுள்ளது.
இதையடுத்து, பேரிகார்டை சரிசெய்யும் பணியில் வெள்ளகோவில் போலீஸ்காரர் ரவிச்சந்திரன் மற்றும் லாரி டிரைவர் ஈடுபட்டிருந்தனர். அப்போது அதிவேகமாக வந்த கார் கட்டுப்பாட்டை இழந்து அவர்கள் மீது மோதியதாக போலீசார் தெரிவித்தனர்.
இந்த விபத்தில் போலீஸ்காரர் ரவிச்சந்திரன் உட்பட 6 பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர்.
போலீஸ் விசாரணையில், கார் டிரைவர் தூக்க கலக்கத்தில் வாகனம் ஓட்டியிருக்கலாம் என்ற தகவலும் தெரியவந்துள்ளது.
உயிரிழந்தவர்களின் உடல்கள் பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.
இந்த விபத்து அதிகாலை 4 மணியளவில் நடைபெற்றதாக கூறப்படுகிறது. தொடர்ந்து இரவு மற்றும் அதிகாலை நேரங்களில் நடைபெறும் சாலை விபத்துகள் கவலை அளிப்பதாகவும், நீண்ட தூர பயணங்களில் ஓய்வின்றி வாகனம் ஓட்டுவது ஆபத்தானது என்றும் போலீசார் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
