திருச்செந்தூர் கோயிலில் உறுதிமொழிப் படிவத்தில் கையெழுத்திட்ட அமைச்சர் ஸ்ரீநாத்!
தூத்துக்குடி: திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் சுவாமி தரிசனம் செய்த தமிழக மீன்வளத்துறை அமைச்சர் ஸ்ரீநாத், இந்து மதத்தின் மீது நம்பிக்கை கொண்டிருப்பதாகக் குறிப்பிடும் உறுதிமொழிப் படிவத்தில் கையெழுத்திட்டுள்ளார்.
திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் கந்த சஷ்டி விழா நவம்பர் 10ஆம் தேதி தொடங்கி 21ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. இதற்கான முன்னேற்பாடுகள் தொடர்பான ஆலோசனைக் கூட்டம் மாவட்ட ஆட்சியர் விஷு மகாஜன் தலைமையில் நடைபெற்றது. இதில் மீன்வளத்துறை அமைச்சர் ஸ்ரீநாத் பங்கேற்றார். அப்போது அவர் கோயிலுக்குச் சென்று சுவாமி தரிசனம் செய்தார்.
இதற்கு முன்பு, அக்டோபர் 10ஆம் தேதி கோயிலில் தரிசனம் செய்தபோது, இந்து மதத்தின் மீது நம்பிக்கை கொண்டிருப்பதாகக் குறிப்பிடும் உறுதிமொழிப் படிவத்தில் அமைச்சர் கையெழுத்திடவில்லை எனக் கூறப்படுகிறது. இதனால், அவரிடம் உறுதிமொழி பெறாமல் தரிசனம் செய்ய அனுமதித்த கோயில் அதிகாரிகள் குறித்து விமர்சனங்கள் எழுந்தன.
இந்த விவகாரம் தொடர்பாக அக்டோபர் 18ஆம் தேதி தினமலர் நாளிதழில் செய்தி வெளியிடப்பட்டது.
இந்நிலையில், தற்போது கோயிலுக்குச் சென்ற அமைச்சர் ஸ்ரீநாத், அதிகாரிகளிடம் உறுதிமொழிப் படிவத்தைக் கேட்டு பெற்று அதில் கையெழுத்திட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், அவருடன் சென்ற தமிழக வெற்றிக் கழக நிர்வாகிகளும் உறுதிமொழிப் படிவத்தில் கையெழுத்திட்ட பின்னரே சுவாமி தரிசனம் செய்ய அழைத்துச் செல்லப்பட்டதாகச் செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.
