தூத்துக்குடி: உப்பளத் தொழிலை பாதிக்கும் நடவடிக்கைகளுக்கு எதிர்ப்பு தெரிவித்து, தி.மு.க.வுக்கு இந்த தேர்தலில் ஓட்டுப்போட மாட்டோம் எனக் கூறி, கிராம மக்கள் வீடுகளில் கருப்புக்கொடி கட்டி போராட்டத்தில் ஈடுபட்டனர்.
தூத்துக்குடி சட்டசபை தொகுதிக்குட்பட்ட முள்ளக்காடு, அத்திமரப்பட்டி, சவேரியார்புரம், பொட்டல்காடு உள்ளிட்ட பகுதிகளில் ஆயிரக்கணக்கான ஏக்கரில் உப்பளங்கள் செயல்பட்டு வருகின்றன. இந்நிலங்களை தமிழக அரசின் சிப்காட் நிறுவனம் கையகப்படுத்தி, கப்பல் கட்டும் தளம் அமைக்க நடவடிக்கை எடுத்து வருவதாக கூறப்படுகிறது.
இந்த திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து, உப்பு உற்பத்தியாளர்கள் மற்றும் உப்பளத் தொழிலாளர்கள் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். உப்பளத் தொழிலை பாதிக்கும் இந்த திட்டத்தை மாற்றி, வேறு இடத்தில் கப்பல் கட்டும் தளம் அமைக்க வேண்டும் என அவர்கள் வலியுறுத்தினர்.
ஐந்து கிராமங்களைச் சேர்ந்த மக்கள், தி.மு.க. அரசு இந்த பிரச்சினையில் நடவடிக்கை எடுக்கவில்லை என குற்றம்சாட்டி, வரவிருக்கும் தேர்தலில் தி.மு.க.வுக்கு ஓட்டு போடமாட்டோம் என அறிவித்துள்ளனர்.
மேலும், தொகுதி எம்.எல்.ஏ. மற்றும் அமைச்சரான Geetha Jeevan அவர்களிடம் கோரிக்கை வைத்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என அவர்கள் தெரிவித்தனர்.
எங்கள் பகுதிக்கு ஓட்டு கேட்டு வர அனுமதிக்க மாட்டோம் என்றும், எதிர்ப்பை வெளிப்படுத்தும் வகையில் ஐந்து கிராமங்களின் வீடுகளிலும் கருப்புக்கொடி ஏற்றியுள்ளோம் என்றும் மக்கள் கூறினர்.
