திருப்பூர்: “நான் திமுக அடிமை, திமுக பரம்பரை என்று பெருமையாக பேசுவது என்ன அர்த்தம்?” என நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் தேர்தல் பிரசாரத்தில் கடுமையாக விமர்சித்தார்.
திருப்பூர் மாவட்டம் பல்லடத்தில் நடைபெற்ற பிரசார கூட்டத்தில் பேசிய அவர், நீண்ட காலமாக அதே அரசியல் கட்சிகளை மக்கள் ஆதரித்து வருவதாகவும், அதில் எந்த மாற்றமும் இல்லையெனவும் குறிப்பிட்டார்.
“ஒருவன் தன்னை திமுக அடிமை என்று சொன்னதை கேட்டு சிரித்தேன். ஒருவன் அடிமையாக இருப்பதை பெருமையாக சொல்லுவது புதிது. திமுக பரம்பரை என்று சொல்லிக்கொள்வதும் அதே நிலை தான்” என விமர்சித்தார்.
மேலும், மக்கள் அறிவை வளர்த்துக் கொள்ள வேண்டும் என்றும், புத்தகங்களை வாசிக்கும் பழக்கத்தை வளர்த்துக் கொள்ள வேண்டும் என்றும் அவர் அறிவுறுத்தினார். “செல்போனில் செலவழிக்கும் நேரத்தில் புத்தகங்களை படியுங்கள்; அறிவை விரிவுபடுத்துங்கள்” என கூறினார்.
அதன்பின் ஒரு உவமைக் கதையை எடுத்துக்காட்டி பேசினார். “கோழி ரத்தம் தடவிய கத்தியை சுவைக்க வந்த ஓநாய், அது தனது ரத்தம் என்பதை அறியாமல் குடித்து இறந்தது போல, மக்கள் தங்களை ஏமாற்றும் அரசியலை அறியாமல் இருப்பதாக” அவர் விளக்கினார்.
“சிறு நலன்கள், பணம், பொருட்கள் வழங்கப்படுவது மூலம் மக்கள் ஏமாற்றப்படுகின்றனர். இறுதியில் அவர்கள் பாதிக்கப்படுவார்கள்” என கூறினார்.
மேலும், “பல ஆண்டுகளாக இதை எச்சரித்து வருகிறேன்; ஆனால் மக்களுக்கு இன்னும் புரியவில்லை” என அவர் குமுறல் வெளியிட்டார்.
பின்னர் பாடல் வடிவிலும் பேசிய அவர், “மாற்றம் வேண்டும் என்றால் விவசாயி சின்னத்திற்கு ஓட்டு போடுங்கள். ஒருமுறை வாய்ப்பு கொடுத்து பாருங்கள்; அதன் பிறகு மாற்றத்தை காணலாம்” என மக்களிடம் கோரிக்கை வைத்தார்.
