பிரீமியர் லீக் கிரிக்கெட் தொடரின் நிர்வாகப் பொறுப்பில் இருந்து விலகியதற்கு, தாவூத் இப்ராஹிம் கும்பலின் கொலை மிரட்டல்களே முக்கிய காரணம் என முன்னாள் ஐபிஎல் நிர்வாகி Lalit Modi தெரிவித்துள்ளார்.
ஏஎன்ஐ செய்தி நிறுவனத்திற்கு அளித்த நேர்காணலில் பேசிய அவர், கிரிக்கெட் சூதாட்ட உலகில் Dawood Ibrahim மிகுந்த செல்வாக்குடன் செயல்பட்டு வந்ததாகக் கூறினார்.
கிரிக்கெட் போட்டிகளைச் சுற்றிய சூதாட்டம் மிகப்பெரிய அளவில் நடைபெற்று வந்ததாகவும், தற்போதைய காலகட்டத்தில் அதன் மதிப்பு மேலும் அதிகரித்துள்ளதாகவும் அவர் தெரிவித்தார். ஒவ்வொரு பந்தையும் மையமாகக் கொண்டு கூட சூதாட்டம் நடைபெற வாய்ப்பு இருப்பதாகவும் குறிப்பிட்டார்.
ஐபிஎல் தொடங்கப்பட்ட முதல் மூன்று ஆண்டுகளில் போட்டி நிர்ணயம் (மேட்ச் பிக்சிங்) நடைபெறாமல் இருக்க கடுமையான நடவடிக்கைகளை எடுத்ததாக லலித் மோடி கூறினார். சந்தேகத்திற்கிடமான பலரை மைதானங்களில் இருந்து வெளியேற்றியதுடன், சிலருக்கு நுழைவு தடையும் விதித்ததாக தெரிவித்தார்.
இந்த நடவடிக்கைகள் சூதாட்ட கும்பல்களுக்கு விருப்பமில்லாததாக இருந்ததால், தமக்கு கோடிக்கணக்கான ரூபாய் லஞ்சம் வழங்க முயற்சிகள் நடந்ததாகவும், ஆனால் அவற்றை நிராகரித்ததாகவும் அவர் கூறினார்.
மேலும், தாவூத் இப்ராஹிமின் நெருங்கிய தொடர்புடைய ஒருவர், ஐபிஎல் அணியை வாங்கித் தருமாறு கேட்டதாகவும், அதற்கு தாம் மறுப்பு தெரிவித்ததாகவும் லலித் மோடி கூறினார்.
இந்தியாவிற்கு திரும்பினால் பாதுகாப்பு அச்சுறுத்தல் இருப்பதாக தாம் தெரிவித்தபோது, தாவூத் இப்ராஹிமை நேரடியாக தொடர்புகொண்டு பிரச்சினையை தீர்ப்பதாக அந்த நபர் கூறியதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
தொடர்ந்து, கிரிக்கெட் நிர்வாகத்தில் இருந்து விலகுவதாக தாம் உறுதி அளித்த பின்னரே, தமக்கு எதிரான அச்சுறுத்தல்கள் குறைந்ததாகவும் லலித் மோடி கூறியுள்ளார்.
இந்நிலையில், லலித் மோடி மீது இந்தியாவில் சட்டவிரோத பணப் பரிமாற்றம் மற்றும் அந்நியச் செலாவணி விதிமீறல் தொடர்பான வழக்குகள் நிலுவையில் உள்ளன. விசாரணை அமைப்புகளின் நடவடிக்கைகளை எதிர்கொண்டு வரும் நிலையில், அவர் தற்போது வெளிநாட்டில் வசித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
