‘தாய் மாமன் தங்க மோதிரம்’ திட்டம்: தங்க மோதிரங்களை அனுப்பும் பணி தொடக்கம்
சென்னை: அரசு மருத்துவமனைகளில் பிறக்கும் குழந்தைகளுக்கு ஒரு கிராம் தங்க மோதிரம் வழங்கும் வகையில் தமிழக வெற்றிக் கழகம் தலைமையிலான அரசு செயல்படுத்த உள்ள ‘தாய் மாமன் தங்க மோதிரம் திட்டத்திற்கான’ மோதிரங்களை ஒப்பந்தம் பெற்ற நகைக்கடை நிறுவனங்கள் அனுப்பத் தொடங்கியுள்ளன.
செப்.15ல் திட்டம் தொடக்கம்
அரசு மருத்துவமனைகளில் பிறக்கும் குழந்தைகளுக்கு தலா ஒரு கிராம் தங்க மோதிரம் வழங்கப்படும் என்று முதல்வர் விஜய் அறிவித்திருந்தார்.
இதன்படி, தமிழ்நாடு மருத்துவ சேவைகள் கழகம் சார்பில் ஆண்டுக்கு சுமார் 4.41 லட்சம் குழந்தைகளுக்கு தலா ஒரு கிராம் தங்க மோதிரம் வழங்கப்பட உள்ளது. இத்திட்டம் வரும் செப்.15ம் தேதி தொடங்க உள்ளது.
107 மையங்களில் பாதுகாப்பு பெட்டகங்கள்
திட்டத்திற்காக தயாரிக்கப்படும் தங்க மோதிரங்களை பாதுகாப்பாக இருப்பு வைக்க, மாநிலம் முழுவதும் 107 மையங்களில் நவீன வசதிகளுடன் கூடிய பாதுகாப்பு பெட்டகங்களை அமைக்க தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
மேலும், இத்திட்டத்திற்காக பட்ஜெட்டில் ரூ.2,560 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
89,955 மோதிரங்கள் தயாரிக்கும் பணி
இத்திட்டத்திற்கான ஒப்பந்தத்தை பெற்றுள்ள நகைக்கடை நிறுவனங்கள், தங்களது கடைகளில் இருந்து தயாரிக்கப்பட்ட மோதிரங்களை அனுப்பும் பணியை தொடங்கியுள்ளன.
இதுகுறித்து ஜோய் ஆலுக்காஸ் குழுமத்தின் தலைவர் மற்றும் நிர்வாக இயக்குநர் கூறுகையில், நான்கு கட்டங்களில் முதல் கட்டமாக 89,955 தங்க மோதிரங்களை தயாரித்து வழங்கும் பொறுப்பு தங்கள் நிறுவனத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.
இத்திட்டத்திற்காகவே பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்ட பைகளில் மோதிரங்கள் பேக் செய்யப்படுவதாகவும், அந்த பைகளில் ‘தாய் மாமன் தங்க மோதிரம் திட்டம்’ என்ற பெயர் தெளிவாக குறிப்பிடப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.
சென்னை, கோவையில் பேக்கிங் மையங்கள்
சென்னை மற்றும் கோவையில் உள்ள இரண்டு பிரத்யேக மையங்களில் மோதிரங்களை பேக்கிங் செய்து அனுப்பும் பணி தொடங்கியுள்ளதாக ஜோய் ஆலுக்காஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அரசு தற்போதைய சந்தை விலையிலேயே தங்கத்திற்கான தொகையை செலுத்துவதாகவும், மோதிரங்களை உற்பத்தி செய்தல், ஹால்மார்க் முத்திரையிடுதல், பாதுகாப்பான முறையில் பேக்கிங் செய்தல் மற்றும் விநியோகம் செய்வது ஆகிய பணிகள் தங்கள் நிறுவனத்தின் பொறுப்பு என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
