புது டெல்லி: Supreme Court of India, பட்டியலின (எஸ்.சி) அந்தஸ்து தொடர்பாக முக்கிய தீர்ப்பை வழங்கியுள்ளது. ஹிந்து, சீக்கியர் அல்லது பவுத்த மதத்தை தவிர்த்து, பிற மதத்திற்கு மாறுபவர்கள் உடனடியாக எஸ்.சி அந்தஸ்தை இழக்கின்றனர் என நீதிமன்றம் தெளிவுபடுத்தியுள்ளது.
ஆந்திராவை சேர்ந்த சின்தடா ஆனந்த், கிறிஸ்துவ மதத்திற்கு மாறி போதகராக இருந்த நிலையில், ஜாதி அடிப்படையிலான துன்புறுத்தல் குறித்து எஸ்.சி/எஸ்.டி வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் நடவடிக்கை கோரி வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கை Andhra Pradesh High Court தள்ளுபடி செய்தது. இதற்கு எதிராக அவர் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார்.
இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள் பி.கே. மிஸ்ரா மற்றும் மன்மோகன் அடங்கிய அமர்வு, 1950ஆம் ஆண்டு வெளியிடப்பட்ட அரசியல் சாசன உத்தரவை சுட்டிக்காட்டி, மதம் மாற்றம் செய்தால் அதுவரை இருந்த எஸ்.சி அந்தஸ்து உடனடியாக செல்லாது என தெரிவித்தது.
மேலும், பிற மதத்திற்கு மாறிய ஒருவர் மீண்டும் தாய் மதத்திற்கு திரும்பி எஸ்.சி அந்தஸ்தை பெற விரும்பினால், மூன்று முக்கிய ஆதாரங்களை கட்டாயம் சமர்ப்பிக்க வேண்டும் என நீதிமன்றம் விளக்கியுள்ளது.
ஆரம்பகால ஆதாரம்:
அந்த நபர் முதலில் 1950 அரசியல் சாசன உத்தரவின் கீழ் பட்டியலின ஜாதியில் பிறந்தவர் என்பதை நிரூபிக்க வேண்டும்.
நம்பகமான சான்றுகள்:
மாற்று மதத்தை முழுமையாக துறந்து, தாய் மதத்திற்கு திரும்பியதையும், தனது பழைய ஜாதி மரபுகள், சடங்குகள் மற்றும் வழிபாடுகளை பின்பற்றுவதையும் உறுதி செய்ய வேண்டும்.
சமூக அங்கீகாரம்:
அந்த நபரை அவரது சொந்த சமூகத்தினர் மீண்டும் ஏற்றுக்கொண்டுள்ளனர் என்பதற்கான ஆதாரம் அவசியம். தனிப்பட்ட அறிவிப்பு மட்டும் போதாது என நீதிமன்றம் குறிப்பிட்டுள்ளது.
இந்த மூன்று நிபந்தனைகளில் ஏதேனும் ஒன்றை நிரூபிக்க தவறினால், மீண்டும் எஸ்.சி அந்தஸ்தை கோர முடியாது எனவும் நீதிமன்றம் தெளிவுபடுத்தியுள்ளது.
எஸ்.டி.க்கு விலக்கு:
பழங்குடியினர் (எஸ்.டி) தொடர்பில் மதமாற்றம் நேரடி தடையாக கருதப்படாது. ஆனால், அவர்கள் பழங்குடியின மரபுகள், சடங்குகள் மற்றும் கலாசாரத்தை பின்பற்றி வாழ்கிறார்களா என்பதை நிரூபிக்க வேண்டும். மேலும், அவர்களை சமூகத்தினர் ஏற்றுக்கொள்வதும் அவசியம் என உச்ச நீதிமன்றம் கூறியுள்ளது.
