தாமஸ் ஆல்வா எடிசன் சாதனையை மிஞ்சிய இந்திய விஞ்ஞானி; அமெரிக்காவில் அசத்திய குருதேஜ் சந்த்
புதுடில்லி: டில்லி ஐஐடி பட்டதாரியான இந்திய வம்சாவளி விஞ்ஞானி குருதேஜ் சந்த், அமெரிக்காவில் தாமஸ் ஆல்வா எடிசனின் காப்புரிமை சாதனையை முறியடித்து முக்கிய சாதனை படைத்துள்ளார்.
இந்தியா தொழில்நுட்பத் துறையில் உலகளவில் தொடர்ந்து முன்னேறி வருகிறது. பல இந்தியர்கள் சர்வதேச அளவில் தலைசிறந்த தொழில்நுட்ப வல்லுநர்களாகவும் விஞ்ஞானிகளாகவும் விளங்கி வருகின்றனர். கூகுள் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரியாக செயல்பட்ட சுந்தர் பிச்சையைப் போலவே, அமெரிக்காவில் கவனம் பெற்றுள்ள மற்றொரு இந்தியராக குருதேஜ் சந்த் உருவெடுத்துள்ளார்.
இந்திய வம்சாவளியைச் சேர்ந்த இவர், விஞ்ஞானி தாமஸ் ஆல்வா எடிசனின் 1093 காப்புரிமை சாதனையை முறியடித்து, அமெரிக்காவில் மட்டும் 1400-க்கும் அதிகமான காப்புரிமைகளையும், உலகளவில் 2200-க்கும் மேற்பட்ட காப்புரிமைகளையும் பெற்றுள்ளார். இதன் மூலம், அமெரிக்க வரலாற்றில் அதிக காப்புரிமைகள் பெற்ற 7வது முக்கிய கண்டுபிடிப்பாளராக உயர்ந்துள்ளார்.
பஞ்சாப் மாநிலம் அமிர்தசரஸில் பிறந்து வளர்ந்த குருதேஜ் சிங் சந்த், தனது ஆரம்பக் கல்வியை குரு நானக் தேவ் பல்கலைக்கழகத்தில் முடித்தார். பின்னர் டில்லி ஐஐடியில் எலக்ட்ரிக்கல் இன்ஜினியரிங் துறையில் முதுகலை பட்டம் பெற்றார்.
அதன்பின் பிஎச்டி படிப்பிற்காக அமெரிக்கா சென்ற அவர், வட கரோலினா பல்கலைக்கழகத்தில் இயற்பியலில் முனைவர் பட்டம் பெற்றார். தொடர்ந்து மைக்ரோ எலக்ட்ரானிக்ஸ் ஆராய்ச்சி துறையில் முக்கிய நபராக உருவெடுத்தார்.
கடந்த 35 ஆண்டுகளாக மைக்ரான் டெக்னாலஜி நிறுவனத்துடன் இணைந்து பணியாற்றி வரும் அவர், செமிகண்டக்டர் தொழில்நுட்பத்தில் பல முக்கிய கண்டுபிடிப்புகளை செய்துள்ளார்.
ஸ்மார்ட்போன்கள், லேப்டாப்கள், கிளவுட் கம்ப்யூட்டிங் மற்றும் டேட்டா சென்டர்களில் பயன்படுத்தப்படும் அதிநவீன மெமரி சிப்கள் சிறியதாகவும் வேகமாகவும் செயல்படுவதற்கு அவரது கண்டுபிடிப்புகள் முக்கிய பங்காற்றியுள்ளதாக கூறப்படுகிறது.
தற்போது அந்த நிறுவனத்தின் முக்கிய பொறுப்பில் இருந்து தொழில்நுட்ப வளர்ச்சியை வழிநடத்தி வருகிறார்.
குருதேஜ் சந்தின் இந்த சாதனை சமூக வலைதளங்களில் பெரிதும் பாராட்டப்பட்டு வருகிறது. உலகளவில் இந்தியர்களின் திறமையை அவர் மீண்டும் ஒருமுறை நிரூபித்துள்ளதாக பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
