தவெகவிற்கு விடுதலை சிறுத்தைகள் கட்சி ஆதரவு அளிக்கிறதா என்பது குறித்து சனிக்கிழமை காலை அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படும் என விசிக தலைவர் தொல். திருமாவளவன் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய அவர், கட்சித் தொண்டர்களின் உணர்வுகளை மதிப்பது தனது பொறுப்பும் கடமையும் என கூறினார். சமீபத்திய அரசியல் சூழ்நிலை மற்றும் ஏற்பட்டுள்ள நெருக்கடி குறித்து கட்சியின் உயர்நிலைக் குழுவுடன் ஆலோசனை நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.
அதன்படி, வெள்ளிக்கிழமை மாலை 5 மணிக்கு இணையவழி உயர்நிலைக் குழு கூட்டம் நடைபெறுகிறது. அந்த கூட்டத்தில் கட்சியின் முன்னணி நிர்வாகிகள் மற்றும் தோழர்களுடன் ஆலோசித்து முடிவு எடுக்கப்படும் என்றும் அவர் கூறினார்.
மேலும், ஜனநாயக முறையில் கட்சிக்குள் கருத்துகளை கேட்டு முடிவெடுப்பது வழக்கமான ஒன்று எனவும், கட்சித் தலைவராக தனக்கு அதிகாரம் இருந்தாலும் நிர்வாகிகளின் கருத்துகளையும் உணர்வுகளையும் மதிக்க வேண்டியது அவசியம் என்றும் திருமாவளவன் குறிப்பிட்டார்.
உயர்நிலைக் குழு கூட்டம் முடிந்த பிறகு, கட்சியின் இறுதி முடிவு சனிக்கிழமை செய்தியாளர்கள் சந்திப்பில் முறையாக அறிவிக்கப்படும் என்றும் தெரிவித்தார்.
இதற்கிடையில், திமுக கூட்டணி மக்களின் தீர்ப்பை மதிக்கும் என்றும், தவெக தலைவர் விஜய் ஆட்சியமைக்க மக்களின் தீர்ப்பு இருந்தால் அதற்கு இடையூறாக இருக்க மாட்டோம் என முதல்வர் மு.க. ஸ்டாலின் கூறியதாகவும் திருமாவளவன் தெரிவித்தார்.
தவெகவுக்கு விசிக ஆதரவு அளித்தால் அதற்கு திமுக தலைவர் எதிர்ப்பு தெரிவிக்க மாட்டாரா என்ற செய்தியாளர்களின் கேள்விக்கு பதிலளித்த அவர், “இது மிகவும் யூகமான கேள்வி. இன்னும் எங்களது நிலைப்பாட்டையே எடுக்கவில்லை. முன்னணி தோழர்களுடன் ஆலோசித்த பிறகு எடுக்கப்படும் முடிவின் அடிப்படையில் பின்னர் கேள்வி கேட்கலாம்” என்று கூறினார்.
