திருச்சி: தமிழக மக்கள் உதயநிதியை ஒருபோதும் முதல்வராக ஏற்க மாட்டார்கள் என்று மத்திய அமைச்சர் மற்றும் தமிழக பா.ஜ.க மேலிட பொறுப்பாளர் பியூஷ் கோயல் தெரிவித்தார்.
திருச்சியில் செய்தியாளர்களிடம் பேசிய அவர் கூறியதாவது:
தமிழக சட்டசபை தேர்தல் தமிழர்களின் பெருமையையும் தமிழ் கலாச்சாரத்தையும் பாதுகாப்பதற்கான தேர்தலாக இருக்கும். மேலும் முதல்வர் ஸ்டாலின் தலைமையிலான அரசின் ஊழல் நடைமுறைகளில் இருந்து மக்களை காப்பாற்றுவதற்கான தேர்தலாகவும் இருக்கும்.
இந்த தேர்தலில் ஊழல் நிறைந்த மக்கள் விரோத ஸ்டாலின் அரசு அகற்றப்படுவது உறுதி. தமிழக மக்கள் உதயநிதியை ஒருபோதும் முதல்வராக ஏற்க மாட்டார்கள்.
டாஸ்மாக் ஊழல் மூலம் அரசு கருவூலத்தில் இருந்து முதல்வர் ஸ்டாலின் குடும்பத்துக்கும் தி.மு.க உறுப்பினர்களுக்கும் ரூ.50 ஆயிரம் கோடி சென்றுள்ளதாக குற்றம்சாட்டினார்.
அரசின் பல்வேறு ஒப்பந்தங்களில் ஊழல் பரவி கிடக்கிறது. சட்டம் ஒழுங்கு சீர்குலைந்துள்ளதால் தி.மு.க அரசின் மீது மக்கள் அதிருப்தியில் உள்ளனர் என்றும் அவர் கூறினார்.
ஸ்டாலின் குடும்ப ஆட்சியை முடிவுக்கு கொண்டு வந்து அடுத்த முதல்வராக பழனிசாமி பதவியேற்பார். தமிழகத்தில் தேசிய ஜனநாயக கூட்டணி தலைமையில் சிறந்த ஆட்சி அமையும்.
எங்கள் கூட்டணிக் கட்சிகள் ஒரு குடும்பத்தைப் போன்றவை. ஒரு அறைக்குள் கூடி ஆலோசித்து அனைத்து முடிவுகளும் சுமுகமாக எடுக்கப்படுகின்றன என்று பியூஷ் கோயல் தெரிவித்தார்.
