சென்னை: தமிழகத்தில் சட்டசபை தேர்தலை முன்னிட்டு, டி.ஜி.பி உட்பட நான்கு போலீஸ் அதிகாரிகளை தேர்தல் கமிஷன் இடமாற்றம் செய்து உத்தரவிட்டுள்ளது.
இதன்படி, கடந்த ஆகஸ்ட் மாதம் முதல் சட்டம் ஒழுங்கு டி.ஜி.பியாக பணியாற்றி வந்த வெங்கடராமன் மாற்றப்பட்டுள்ளார். அவருக்கு பதிலாக, சென்னை ஊனமாஞ்சேரியில் உள்ள காவலர் உயர் பயிற்சியக இயக்குனராக இருந்த சந்தீப் ராய் ரத்தோட் புதிய சட்டம் ஒழுங்கு டி.ஜி.பியாக நியமிக்கப்பட்டுள்ளார்.
மதுரை போலீஸ் கமிஷனர் லோகநாதன், தாம்பரம் போலீஸ் கமிஷனர் அமல்ராஜ் மற்றும் கோவை தலைமையிடமாக கொண்ட மேற்கு மண்டல ஐ.ஜி சரவணசுந்தர் ஆகியோரும் மாற்றப்பட்டுள்ளனர்.
அவர்களின் இடங்களுக்கு முறையே, போக்குவரத்து மற்றும் சாலை பாதுகாப்பு பிரிவு ஐ.ஜி அபிஷேக் தீக்ஷித், கடலோர பாதுகாப்பு குழுமத்தின் கூடுதல் டி.ஜி.பி சஞ்சய்குமார் மற்றும் மாநில குற்றப்பிரிவு ஐ.ஜி ரம்யாபாரதி நியமிக்கப்பட்டுள்ளனர்.
இதனுடன், சேலம் மாவட்ட கலெக்டர் பிருந்தாதேவி மாற்றப்பட்டு அருண்தம்புராஜ் நியமிக்கப்பட்டுள்ளார். அதேபோல், துாத்துக்குடி மாவட்ட கலெக்டர் இளம்பகவத் மாற்றப்பட்டு விஷுமகாஜன் நியமிக்கப்பட்டுள்ளார்.
இந்த மாற்றங்களுக்கு தேர்தல் கமிஷன் உத்தரவு பிறப்பித்துள்ளது. இதையடுத்து, சந்தீப் ராய் ரத்தோட் நேற்று இரவு புதிய டி.ஜி.பியாக பொறுப்பேற்றார்.
