சென்னை: தமிழக சட்டசபை தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் இன்று நிறைவடைந்தது. இறுதி நாளில் பா.ஜ. மற்றும் காங்கிரஸ் வேட்பாளர்கள் பெருமளவில் மனுக்கள் தாக்கல் செய்ததால், தேர்தல் அலுவலகங்களில் பரபரப்பு நிலவியது.
தமிழகத்தில் அடுத்த ஐந்து ஆண்டுகளுக்கான ஆட்சியை தீர்மானிக்கும் சட்டசபை தேர்தல் வரும் 23ஆம் தேதி நடைபெற உள்ளது. இதில் தி.மு.க., அ.தி.மு.க., த.வெ.க., நாம் தமிழர் உள்ளிட்ட கட்சிகள் போட்டியிடுகின்றன.
மார்ச் 30ஆம் தேதி தொடங்கிய வேட்புமனு தாக்கல், அரசு விடுமுறை நாட்களை தவிர்த்து மூன்று நாட்கள் நடைபெற்றது. மொத்தம் 234 தொகுதிகளில் போட்டியிட 3,430 வேட்புமனுக்கள் பெறப்பட்டுள்ளன. இதில் 2,731 ஆண் வேட்பாளர்கள் மற்றும் 698 பெண் வேட்பாளர்கள் மனுக்கள் தாக்கல் செய்துள்ளனர்.
வில்லிவாக்கம் தொகுதியில் நாம் தமிழர் கட்சி சார்பில் திருநங்கை ஒருவர் வேட்புமனு தாக்கல் செய்தது குறிப்பிடத்தக்கது. பலர் ஒன்றுக்கும் மேற்பட்ட மனுக்களை தாக்கல் செய்துள்ளனர்; மாற்று வேட்பாளர்களாக குடும்பத்தினரையும் நிறுத்தியுள்ளனர்.
கரூர் தொகுதியில் அதிகபட்சமாக 84 மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன. தொடர்ந்து தொண்டாமுத்தூர், குளித்தலை, கோவை தெற்கு, தி.நகர் உள்ளிட்ட தொகுதிகளிலும் அதிக எண்ணிக்கையில் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன.
இறுதி நாளில் அரசியல் கட்சிகள் மட்டுமின்றி சுயேச்சை வேட்பாளர்களும் அதிகளவில் ஆர்வம் காட்டினர். கூட்ட நெரிசலை சமாளிக்க தேர்தல் அலுவலகங்களில் சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டன.
வழக்கமாக காலை 11 மணி முதல் பிற்பகல் 3 மணி வரை மனுக்கள் தாக்கல் செய்ய அனுமதி வழங்கப்பட்டது. அதிகமானோர் வந்ததால் டோக்கன் முறை அறிமுகப்படுத்தப்பட்டு, 3 மணிக்குள் வந்த அனைவருக்கும் மனு தாக்கல் செய்ய அனுமதி வழங்கப்பட்டது.
இந்த ஏற்பாடுகளை மேற்கொள்ள தமிழக தலைமை தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக் உத்தரவிட்டிருந்தார். நாளை வேட்புமனுக்கள் பரிசீலனை நடைபெற உள்ளது
