நாகர்கோவில்: சீட் ஒதுக்கீடு தொடர்பான அதிருப்தியை தொடர்ந்து, அமைச்சர் மனோ தங்கராஜ் ஆதரவாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள நிலையில், அவரின் மாவட்டச் செயலாளர் பதவியை நீக்க வேண்டும் என்ற கோரிக்கை தி.மு.க.வில் எழுந்துள்ளது.
2021 சட்டசபை தேர்தலில், நாகர்கோவில் தொகுதியில் தி.மு.க. தோல்வி அடைந்த நிலையில், பத்மநாபபுரம் தொகுதியில் மட்டுமே கட்சி வெற்றி பெற்று, மனோ தங்கராஜ் அமைச்சர் பதவியேற்றார்.
இவருக்கு எதிராக, கட்சி நிர்வாகிகள் மற்றும் பொதுமக்களுடன் தொடர்பில் இல்லாதது போன்ற குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டு வருகின்றன. மேலும், மாவட்டத்தில் பல்வேறு சர்ச்சைகளிலும் அவரது பெயர் இடம்பெற்றதாக கூறப்படுகிறது.
கனிம வளக் கடத்தல் தொடர்பாகவும் அவர்மீது குற்றச்சாட்டுகள் எழுந்ததாகவும், இதனால் ஒரு கட்டத்தில் அமைச்சர் பதவி பறிக்கப்பட்டதாகவும் கூறப்படுகிறது. பின்னர், சிலர் ஆதரவுடன் மீண்டும் அவர் அமைச்சராக நியமிக்கப்பட்டார்.
இந்நிலையில், தற்போதைய தேர்தலில் அவரது தொகுதி தி.மு.க. கூட்டணியில் மார்க்சிஸ்ட் கட்சிக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. இதனால் அதிருப்தியடைந்த அவரது ஆதரவாளர்கள், கன்னியாகுமரி மேற்கு மாவட்ட தி.மு.க. அலுவலகத்தில் கூடி, பத்மநாபபுரம் தொகுதியை மனோ தங்கராஜ்க்கே ஒதுக்க வேண்டும் என தீர்மானம் நிறைவேற்றினர்.
அத்துடன், அவர்கள் அலுவலகத்தில் உள்ளிருப்பு போராட்டத்திலும் ஈடுபட்டனர். இந்த சம்பவம் கட்சி தலைமையிடம் அதிருப்தியை ஏற்படுத்தியதாக கூறப்படுகிறது.
இதையடுத்து, மனோ தங்கராஜை மாவட்டச் செயலாளர் பதவியில் இருந்து நீக்கி, புதிய பொறுப்பாளரை நியமிக்க வேண்டும் என கட்சிக்குள் சிலர் வலியுறுத்தி வருகின்றனர். இதனால் அவரது பதவி எதிர்காலம் கேள்விக்குறியாகியுள்ளது.
