கர்நாடக முதல்வராக D. K. Shivakumar நேற்று பதவியேற்ற நிலையில், அவர் தொடர்பாக கன்னட நாளிதழில் வெளியான புகைப்படம் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
கர்நாடகாவில் வெளியாகும் ‘விஸ்வவாணி’ நாளிதழில் முதல்வர் சிவகுமார் குறித்து வெளியிடப்பட்ட கட்டுரையுடன், சிவபெருமான் தோற்றத்தில் அவர் இருப்பது போன்ற புகைப்படம் முதல் பக்கத்தில் இடம்பெற்றிருந்தது. அந்தப் புகைப்படத்தில் நீண்ட சடைமுடி, புலித்தோல் ஆடை, கையில் உடுக்கை மற்றும் சூலம் ஏந்திய நிலையில் சிவகுமார் சித்தரிக்கப்பட்டிருந்தார்.
இந்தப் படத்தை, ‘விஸ்வவாணி’ நாளிதழின் தலைமை ஆசிரியர் Vishweshwar Bhat தனது சமூக வலைதளப் பக்கத்திலும் பகிர்ந்துள்ளார்.
இந்நிலையில், இந்தப் புகைப்படம் தொடர்பாக பல்வேறு தரப்பினரிடமிருந்து எதிர்ப்புகள் எழுந்துள்ளன. வழக்கறிஞர் Girish Bharadwaj, “இது தெய்வ நிந்தனை. நமது கடவுள்களின் புனிதத்தன்மையை இத்தகைய செயல்கள் குறைத்து மதிப்பிடுகின்றன. அரசியல் நோக்கங்களுக்காக தர்மத்தை அற்பமாக்கக் கூடாது” என்று கருத்து தெரிவித்துள்ளார்.
மேலும், பேராசிரியர்கள், தொழிலதிபர்கள் உள்ளிட்ட பலரும் இந்த புகைப்படத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து, சமூக வலைதளங்களில் தங்களது கருத்துகளை பதிவு செய்து வருகின்றனர்.
