சிவகங்கை: சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரி அருகே நடைபெற்ற மஞ்சுவிரட்டு போட்டியில் காளைகள் முட்டியதில் 3 பேர் உயிரிழந்தனர். மேலும் 50க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.
திருப்பத்தூர் அருகே உள்ள அரளிப்பாறையில் பால தண்டாயுதபாணி சுவாமி கோவிலில் மாசிமக திருவிழாவை முன்னிட்டு அரசு அனுமதியுடன் இன்று மஞ்சுவிரட்டு போட்டி நடைபெற்றது.
இந்த போட்டியில் சுமார் 250 காளைகள் அவிழ்த்து விடப்பட்டன. 100க்கும் மேற்பட்ட வீரர்கள் காளைகளை அடக்கும் போட்டியில் ஈடுபட்டனர்.
மஞ்சுவிரட்டை காண ஆயிரக்கணக்கான மக்கள் மலைக்குன்றின் மேல் மற்றும் சுற்றுப்பகுதிகளில் திரண்டு இருந்தனர். தொழுவிலிருந்து காளைகளை அவிழ்த்து விடுவதற்கு முன் சில இடங்களில் வயல்வெளிகளிலும் காளைகள் விடப்பட்டதாக கூறப்படுகிறது.
அப்போது காளைகள் முட்டியதில் சிங்கம்புணரி அருகே நாட்டார் மங்களம் பகுதியை சேர்ந்த ராமநாதன் (23), சுந்தரராஜ் (48) மற்றும் வட மாநிலத்தை சேர்ந்த ஒருவர் என மூவர் உயிரிழந்தனர்.
உயிரிழந்த மூவரும் மஞ்சுவிரட்டு போட்டியை பார்க்க வந்தவர்கள் என்பது தெரியவந்துள்ளது.
அவர்களின் உடல்கள் சிங்கம்புணரி அரசு மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளன. மேலும் காளைகள் முட்டியதில் 50க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர்.
இந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
