சென்னை: திருப்பூர் மாவட்டம் பல்லடம் சட்டசபை தொகுதியில் போட்டியிடுமாறு தமிழக பா.ஜ. முன்னாள் தலைவர் அண்ணாமலையிடம், அ.தி.மு.க. பொதுச்செயலர் பழனிசாமி வலியுறுத்தி வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இதுகுறித்து பா.ஜ. நிர்வாகிகள் சிலர் கூறியதாவது:
சட்டசபை தேர்தல் தேதி ஓரிரு நாட்களில் அறிவிக்கப்பட உள்ள நிலையில், அ.தி.மு.க. கூட்டணியில் அதிகாரப்பூர்வ தொகுதி பங்கீட்டு பேச்சு இன்னும் தொடங்கவில்லை.
ஆனால் பா.ஜ., பா.ம.க. உள்ளிட்ட கூட்டணி கட்சிகள் போட்டியிடும் தொகுதிகள் குறித்து பழனிசாமி தொடர்ந்து ஆலோசனை நடத்தி வருகிறார்.
எதிர்பார்க்கப்பட்ட தே.மு.தி.க. கூட்டணியில் சேராததால், பா.ஜ. மற்றும் பா.ம.க. உள்ளிட்ட கட்சிகள் அதிக தொகுதிகளை கோரி வருகின்றன.
பா.ஜ. தரப்பில் கன்னியாகுமரி, தூத்துக்குடி, நெல்லை, தென்காசி, தென் சென்னை, கோவை, நீலகிரி, திருப்பூர் ஆகிய லோக்சபா தொகுதிகளுக்குட்பட்ட சட்டசபை தொகுதிகள் மீது கவனம் செலுத்தப்படுகிறது.
கோவை தெற்கு தொகுதியின் எம்.எல்.ஏ.வாக இருக்கும் வானதி, அடுத்த தேர்தலில் கோவை வடக்கு தொகுதியில் போட்டியிட திட்டமிட்டுள்ளார்.
2024 லோக்சபா தேர்தலில் கோவை தொகுதியில் போட்டியிட்ட அண்ணாமலை, வரும் சட்டசபை தேர்தலில் சிங்காநல்லூர் தொகுதியில் போட்டியிட விருப்பம் தெரிவித்துள்ளதாக கூறப்படுகிறது.
ஆனால் கோவை மாவட்டத்தில் பா.ஜ.க்கு ஒரு தொகுதி மட்டுமே வழங்க முடியும் என அ.தி.மு.க. தரப்பு தெரிவித்துள்ளதாக தகவல்.
அதனால் கோவை லோக்சபா தொகுதிக்குட்பட்ட பல்லடம் அல்லது 2021ல் போட்டியிட்ட கரூர் மாவட்டம் அரவக்குறிச்சி தொகுதிகளில் ஒன்றில் அண்ணாமலை போட்டியிடலாம் என பழனிசாமி கூறியதாக தகவல் வெளியாகியுள்ளது.
சென்னை மாநகரில் குறைந்தது நான்கு தொகுதிகளை பா.ஜ. கோரிக்கை வைத்துள்ளது.
அதில் தென் சென்னை லோக்சபா தொகுதிக்குள் இரண்டு தொகுதிகள் வேண்டும் என பா.ஜ. தரப்பு விரும்புகிறது.
வரும் சட்டசபை தேர்தலில் போட்டியிட முனைந்துள்ள முன்னாள் கவர்னர் தமிழிசை, வேளச்சேரி தொகுதியில் போட்டியிட முயற்சி செய்து வருகிறார்.
இதற்காக அவர் சமீபத்தில் டில்லி சென்று உள்துறை அமைச்சர் அமித் ஷா, பா.ஜ. தேசிய தலைவர் நிதின் நபின் மற்றும் அமைப்பு பொதுச்செயலர் சந்தோஷ் ஆகியோரை சந்தித்து வேளச்சேரி தொகுதியை வழங்குமாறு கோரியதாக கூறப்படுகிறது.
ஆனால் அ.தி.மு.க. தரப்பு விருகம்பாக்கம் அல்லது மயிலாப்பூர் தொகுதிகளில் ஒன்றை ஒதுக்க விரும்புவதாக தகவல் வெளியாகியுள்ளது.
