கோல்கட்டா,
மேற்கு வங்க தேர்தல் பிரசாரத்தின் போது பிரதமர் நரேந்திர மோடி சாலையோர கடையில் நின்று ‘ஜல்முரி’ வாங்கி ருசித்த சம்பவம் சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது.
மேற்கு வங்கத்தில் ஏப்ரல் 23 மற்றும் 29 தேதிகளில் இரண்டு கட்டங்களாக சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது. இதையடுத்து, பல்வேறு இடங்களில் தேர்தல் பிரசார கூட்டங்களில் பிரதமர் கலந்து கொண்டு வருகிறார்.
இந்நிலையில், ஜார்கிராம் பகுதியில் நடைபெற்ற கூட்டத்திற்குச் செல்லும் வழியில், அவர் தனது வாகனத்தை நிறுத்தி சாலையோர கடைக்கு சென்றார்.
அங்கு கடை உரிமையாளருடன் சிறிது நேரம் உரையாடிய பின்னர், அந்த பகுதியில் பிரபலமான ‘ஜல்முரி’ சிற்றுண்டியை வாங்கி ருசித்தார்.
வாங்கிய உணவுக்கான தொகையை அவர் வழங்க முயன்றபோது, கடை உரிமையாளர் அதை பெற மறுத்ததாக கூறப்படுகிறது. இருப்பினும், பிரதமர் வற்புறுத்தி பணம் வழங்கியதாக தகவல் வெளியாகியுள்ளது.
‘ஜல்முரி’ என்பது பொரி, கடலை, வெங்காயம், தக்காளி, வெள்ளரி மற்றும் மசாலா பொருட்கள் கலந்து தயாரிக்கப்படும் மேற்கு வங்கத்தின் பிரபலமான தெரு உணவாகும்.
இந்த நிகழ்வு தொடர்பான புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் சமூக ஊடகங்களில் வேகமாக பரவி, பலரின் கவனத்தை ஈர்த்துள்ளன.
