தமிழக தலைமை செயலர் சாய்குமாருக்கு பணி நீட்டிப்பு வழங்க தமிழக அரசு நடவடிக்கை மேற்கொண்டு வரும் நிலையில், முந்தைய ஆட்சியில் வெளியிடப்பட்ட அரசாணை புதிய சட்ட சிக்கலை ஏற்படுத்தக்கூடும் என்ற தகவல் வெளியாகியுள்ளது.
சட்டசபை தேர்தல் காலத்தில், தேர்தல் ஆணையத்தின் உத்தரவின் பேரில் அப்போதைய தலைமை செயலர் முருகானந்தம் மாற்றப்பட்டதைத் தொடர்ந்து, சாய்குமார் தலைமை செயலராக பொறுப்பேற்றார். புதிய அரசு பொறுப்பேற்ற பிறகு நிர்வாகப் பணிகளை ஒருங்கிணைத்து, மாவட்ட ஆட்சியர்கள் மற்றும் துறை செயலர்களுடன் இணைந்து பல்வேறு நிர்வாக நடவடிக்கைகளை அவர் மேற்கொண்டு வருகிறார்.
வரும் ஆகஸ்ட் 31-ஆம் தேதி சாய்குமார் ஓய்வு பெற உள்ள நிலையில், அவருக்கு நவம்பர் மாதம் வரை பணி நீட்டிப்பு வழங்க அரசு முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது. இதற்காக மத்திய அரசின் அனுமதியும் கோரப்பட்டுள்ளது.
ஆனால், முந்தைய ஆட்சிக் காலத்தில் அரசு அதிகாரிகளுக்கு பணி நீட்டிப்பு வழங்கக் கூடாது என்ற அரசாணை வெளியிடப்பட்டிருந்தது. இந்த அரசாணையை அடிப்படையாகக் கொண்டு சட்டரீதியான சவால்கள் எழலாம் என்பதால், அந்த அரசாணையை ரத்து செய்வது குறித்து தமிழக அரசு ஆலோசித்து வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
