சோளிங்கர்:
“தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சரியில்லை என பா.ஜ. கட்சியினர் வாட்ஸ்அப்பில் அவதூறு பரப்பி வருகின்றனர்” என்று கனிமொழி எம்.பி. குற்றஞ்சாட்டினார்.
ராணிப்பேட்டை மாவட்டம் சோளிங்கரில், காங்கிரஸ் வேட்பாளர் ஏ.எம். முனிரத்தினம் எம்.எல்.ஏ.வை ஆதரித்து கனிமொழி எம்.பி. பிரசாரம் செய்தார்.
அப்போது அவர் பேசியதாவது:
மகளிர் உரிமை தொகையை வழங்க முடியாது என எதிர்க்கட்சியினர் கூறினர். ஆனால் 1 கோடியே 30 லட்சம் பெண்களுக்கு தி.மு.க. அரசு மகளிர் உரிமை தொகையை வழங்கியுள்ளது. வருகிற ஆட்சியில் இந்த தொகை ₹2000 ஆக உயர்த்தப்படும்.
100 நாள் வேலை திட்டத்தை நிறுத்தக்கூடிய ஆட்சி மோடி ஆட்சி. நமக்கு எதிராக உள்ள கூட்டணி தமிழகத்திற்கு எதிரானது. இந்தியாவில் அம்பானி, அதானி தவிர வேறு எதையும் “மேக் இன் இந்தியா” செய்யவில்லை. அவர்களையே வளர்த்துள்ளனர்.
மோடியை பார்த்து இபிஎஸ் பயந்து நிற்கிறார். ஆனால் மோடி அமெரிக்காவை பார்த்து பயப்படுகிறார். போர் சூழ்நிலையில் கூட கியாஸ் சிலிண்டர் பெற காத்திருக்க வேண்டிய நிலை உள்ளது. சிலிண்டர் தட்டுப்பாட்டை சரிசெய்து விட்டு வருமாறு அவர்களை திருப்பி அனுப்ப வேண்டும்.
மத்திய பட்ஜெட்டில் தமிழகத்தின் பெயர் கூட இல்லை. திருக்குறளையும் அவர்கள் மறந்துவிட்டனர்.
தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சரியில்லை என கூறுவது தவறு. வேறு குறை கூற முடியாததால் பா.ஜ. வாட்ஸ்அப்பில் பொய்களை பரப்புகிறது. அதில் ஒன்றே இந்த குற்றச்சாட்டு.
யார் தவறு செய்தாலும் சட்டப்படி தண்டனை வழங்கும் ஆட்சி தி.மு.க. ஆட்சி. தேசிய அளவில் சட்டம் ஒழுங்கு நிலையை பார்க்க வேண்டும்.
அ.தி.மு.க. ஆட்சியில் 3 லட்சத்திற்கும் மேல் குற்றங்கள் பதிவு செய்யப்பட்டன. தி.மு.க. ஆட்சியில் அது 2 லட்சமாக குறைந்துள்ளது.
பெண்களுக்கு எதிரான குற்றங்களில் தேசிய சராசரியில் உத்தரபிரதேசத்தை விட தமிழகம் குறைவாக உள்ளது. அதை மேலும் குறைக்க நடவடிக்கை எடுத்து வருகிறோம்.
நாம் செலுத்தும் வரிக்கு பிற மாநிலங்களை விட குறைவாக வழங்கி ஓரவஞ்சனை செய்கிறார்கள். எங்களை குற்றம் சொல்ல உங்களுக்கு அருகதை இல்லை.
இவ்வாறு அவர் பேசினார்.
