சென்னை: நடிகர் விஜய்யின் மனைவி சங்கீதா குறித்து சமூக வலைதளங்களில் அவதூறு மற்றும் ஆபாச பதிவுகள் பரப்பப்படுவதை கண்டிக்காமல் விஜய் மவுனமாக இருப்பது கண்டிக்கத்தக்கது என அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கம் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து அந்த அமைப்பு வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியதாவது:
திரைப்பட நடிகர் விஜய், தமிழக வெற்றிக் கழகம் என்ற அரசியல் கட்சியை தொடங்கி தற்போது பொது வாழ்வில் செயல்பட்டு வருகிறார். இந்நிலையில் அவரது மனைவி சங்கீதா, செங்கல்பட்டு குடும்ப நீதிமன்றத்தில் விவாகரத்து கோரி மனு தாக்கல் செய்திருப்பது தனிப்பட்ட சட்ட நடைமுறையாகும்.
இது சம்பந்தப்பட்ட இரு நபர்களுக்கும் மற்றும் நீதிமன்றத்திற்கும் இடையிலான விஷயம் மட்டுமே. அதை சமூக வலைதளங்களில் இழிவுபடுத்தி, ஆபாசமாக விவாதிக்கும் உரிமை யாருக்கும் இல்லை.
ஆனால் விஜய்யின் பெயரை பயன்படுத்தி செயல்படும் கட்சி தொண்டர்கள் சமூக வலைதளங்களில் சங்கீதாவை குறிவைத்து அவதூறு, ஆபாச பதிவுகள் மற்றும் கேலிச் சித்திரங்களை பரப்பி வருகின்றனர்.
திரைப்பட நடிகராக இருப்பது தனிப்பட்ட தொழிலாக இருந்தாலும், அரசியல் கட்சி தொடங்கி மக்களிடம் ஆதரவு கோரும் போது அந்த நபர் பொது வாழ்க்கையின் நெறிமுறைகளை பின்பற்ற வேண்டிய நிலை ஏற்படுகிறது.
இந்த நிலையில் விஜய்யின் பெயரை கூறி பெண்களை இழிவுபடுத்தும் வகையில் பதிவுகள் வெளியிடப்படும் போது அதை கண்டிக்காமல் அவர் மவுனம் காக்குவது மறைமுக ஒப்புதலாக பார்க்கப்படும்.
எனவே ரசிகர்கள் என்ற பெயரில் நடைபெறும் சமூக வலைதள ஆணாதிக்க வன்முறையை விஜய் வெளிப்படையாக கண்டிக்க வேண்டும்.
சங்கீதா மீது சமூக வலைதளங்களில் பரப்பப்படும் அவதூறு மற்றும் ஆபாச தாக்குதல்களை அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கம் கடுமையாக கண்டிக்கிறது. இதுபோன்ற செயல்களில் ஈடுபடுபவர்களுக்கு கட்சி ரீதியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அந்த அமைப்பு வலியுறுத்தியுள்ளது.
