கோவில் முன்பு ஈவெரா சிலை: கோர்ட் உத்தரவின்படி கலெக்டர் ஆய்வு
தஞ்சாவூர்: தஞ்சாவூர் மாவட்டம் கண்டியூர் பிரம்மசிரகண்டீஸ்வரர் கோவில் முன்பகுதியில் அமைக்கப்பட்டுள்ள ஈவெரா சிலை தொடர்பாக, கோர்ட் உத்தரவின்படி மாவட்ட கலெக்டர் ரேவதி நேரில் ஆய்வு மேற்கொண்டார்.
கோவில் நிலத்தில் சிலை அமைக்கப்பட்டதாக புகார்
கண்டியூர் பிரம்மசிரகண்டீஸ்வரர் கோவில் முன்பகுதியில், கோவிலுக்கு சொந்தமான இடத்தில் அறநிலையத்துறை அனுமதியின்றி ஈவெரா சிலையும், கம்யூனிஸ்ட் கொடிக்கம்பமும் நிறுவப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
இதனை அகற்றக்கோரி ஹிந்து தமிழர் கட்சி நிறுவனத் தலைவர் ராம ரவிக்குமார், சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளையில் பொதுநல மனு தாக்கல் செய்திருந்தார்.
கோர்ட்டில் முன்வைக்கப்பட்ட விளக்கம்
இந்த மனுவை நீதிபதிகள் சி.வி.கார்த்திகேயன், ஆர்.சக்திவேல் ஆகியோர் அடங்கிய அமர்வு விசாரித்தது.
அப்போது கோவில் தரப்பு வழக்கறிஞர் சந்திரசேகர், ஈவெரா சிலை முதலில் மாநில நெடுஞ்சாலைத் துறைக்கு சொந்தமான இடத்தில் சுமார் 30 ஆண்டுகளுக்கு முன்பு நிறுவப்பட்டதாக தெரிவித்தார்.
பின்னர் சாலை விரிவாக்கப் பணிகளின்போது, அந்த சிலை கோவில் நிலத்திற்குள் மாற்றப்பட்டதாகவும், சிலையை வேறு இடத்திற்கு மாற்ற அறநிலையத்துறை இணை கமிஷனர், மாவட்ட கலெக்டருக்கு பரிந்துரை செய்துள்ளதாகவும் நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது.
கலெக்டர் நேரில் ஆய்வு
இதையடுத்து, சிலை அமைந்துள்ள இடம் உண்மையில் கோவிலுக்கு சொந்தமான நிலமா என்பதை மாவட்ட கலெக்டர் நேரில் சென்று ஆய்வு செய்து, செப்.9ம் தேதி அறிக்கை தாக்கல் செய்ய நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
அதன்படி, தஞ்சாவூர் கலெக்டர் ரேவதி, கண்டியூர் பிரம்மசிரகண்டீஸ்வரர் கோவில் முன்பு ஈவெரா சிலை அமைந்துள்ள பகுதியை நேரில் ஆய்வு செய்தார். மேலும், அப்பகுதி தொடர்பான நில விவரங்கள் குறித்து வருவாய்த்துறை அதிகாரிகளிடம் விளக்கம் பெற்றார்.
அடுத்தகட்ட நடவடிக்கை என்ன?
கலெக்டரின் ஆய்வு அறிக்கை நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட பிறகு, ஈவெரா சிலை அமைந்துள்ள இடம் கோவில் நிலமா என்பது உள்ளிட்ட விவகாரங்களில் அடுத்தகட்ட நடவடிக்கை குறித்து முடிவு எடுக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
