மதுரை: கோவில்களுக்கு சொந்தமான சொத்துக்களை பத்திரப்பதிவு செய்யும் வகையில் வெளியிடப்பட்ட அரசாணை திரும்பப் பெறப்பட்டுள்ளதாக, தமிழக அரசு Madras High Court Madurai Bench மதுரைக் கிளையில் தெரிவித்துள்ளது.
இந்த விவகாரம் தொடர்பாக சேலத்தைச் சேர்ந்த ராதாகிருஷ்ணன் தாக்கல் செய்த பொதுநல மனுவில், கோவில்களுக்கு சொந்தமான பல சொத்துக்கள் ஆக்கிரமிப்பில் உள்ளன என்றும், அவை நீதிமன்ற உத்தரவுப்படி மீட்கப்பட்டு வருகின்றன என்றும் குறிப்பிடப்பட்டது.
மேலும், கோவில்கள் மற்றும் வக்பு வாரியத்திற்கு சொந்தமான சொத்துக்களை பத்திரப்பதிவு செய்யும் வகையில், தமிழக வருவாய்த்துறை 2025 செப்டம்பர் 30ஆம் தேதி அரசாணை வெளியிட்டதாக மனுவில் கூறப்பட்டது. அந்த அரசாணையின் அடிப்படையில், பூஜ்ஜியம் மதிப்பில் சொத்துகளை பதிவேற்றம் செய்ய மூத்த ஐஏஎஸ் அதிகாரிகள் கொண்ட குழு அமைக்கப்பட்டதாகவும், இத்தகைய அரசாணை பிறப்பிக்க அந்தத் துறைக்கு அதிகாரம் இல்லை என்றும், இது அரசியலமைப்பு சட்டத்திற்கு எதிரானது என்றும் மனுதாரர் வாதிட்டார்.
இதனால் அந்த அரசாணையை ரத்து செய்ய வேண்டும் என்றும், இடைக்காலத் தடை விதிக்க வேண்டும் என்றும் கோரப்பட்டது. இந்த வழக்கை கடந்த அக்டோபர் 30ஆம் தேதி விசாரித்த நீதிபதிகள் அமர்வு, அரசாணைக்கு இடைக்காலத் தடை விதித்தது.
இவ்வழக்கு மீண்டும் நீதிபதிகள் என். சதீஷ்குமார் மற்றும் எம். ஜோதிராமன் அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது தமிழக அரசு தலைமை வழக்கறிஞர் ராமன், “அரசாணை பிப்ரவரி 19ஆம் தேதி திரும்பப் பெறப்பட்டுள்ளது. சட்டத்திற்குட்பட்டு புதிய திட்டம் வகுக்கப்பட்டு, புதிய அரசாணை வெளியிடப்படும்” என தெரிவித்தார்.
இதனைத் தொடர்ந்து, “அரசாணை திரும்பப் பெறப்பட்டுள்ளதால், இந்த மனு காலாவதியானது” எனக் கூறி, மனுவை தள்ளுபடி செய்வதாக நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
