சென்னை: அ.தி.மு.க. கூட்டணியில் புதிய தமிழகம் கட்சி இடம்பெறாது என பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
அவர் கூறுகையில், த.மா.கா. தலைவர் ஜி.கே. வாசன், இந்திய ஜனநாயக கட்சி தலைவர் பாரிவேந்தர், புரட்சி பாரதம் தலைவர் ஜெகன் மூர்த்தி உள்ளிட்டவர்களுடன் கூட்டணி மற்றும் தொகுதி பங்கீடு தொடர்பான பேச்சுவார்த்தைகள் இறுதி கட்டத்தை எட்டியுள்ளன. இன்னும் ஓரிரு நாளில் தொகுதிகள் பட்டியல் வெளியிடப்படும் என்றும் தெரிவித்தார்.
மேலும், புதிய கட்சிகள் இனி கூட்டணியில் சேர வாய்ப்பு இல்லை என்றும், புதிய தமிழகம் கட்சியுடன் பேச்சுவார்த்தை வெற்றியளிக்கவில்லை என்றும் கூறினார். “அவர்கள் கேட்பதும், நாங்கள் கூறுவதும் ஒத்துவரவில்லை” என விளக்கம் அளித்தார்.
மயிலாப்பூர் தொகுதியிலிருந்து தனது பிரசாரத்தை தொடங்க உள்ளதாகவும், திமுக ஆட்சியில் செய்தியாளர்கள் மீதான தாக்குதல் அதிகரித்துள்ளதாகவும் அவர் குற்றம்சாட்டினார்.
சசிகலா மற்றும் ராமதாஸ் அமைக்கும் கூட்டணி தங்களுக்கு எந்த பாதிப்பும் இல்லை என்றும், திமுக கூட்டணியில் உள்ள சில கட்சிகள் அதிருப்தியில் உள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
மேலும், குறைவான தொகுதிகளில் போட்டியிடுவது பின்னடைவு அல்ல என்றும், நிலைமைக்கு ஏற்ப முடிவுகள் எடுக்கப்படுகின்றன என்றும் கூறினார். தேர்தல் களத்தில் அதிமுக வேகமாக செயல்படுகிறது எனவும் அவர் வலியுறுத்தினார்.
