குல்மார்க் கேபிள் கார் கோளாறு; அந்தரத்தில் சிக்கிய 300 பேர் பத்திரமாக மீட்பு
ஸ்ரீநகர்: ஜம்மு – காஷ்மீரின் குல்மார்க் பகுதியில் தொழில்நுட்ப கோளாறு காரணமாக கேபிள் கார் சேவை திடீரென நிறுத்தப்பட்டதால், அந்தரத்தில் சிக்கியிருந்த 300க்கும் மேற்பட்ட சுற்றுலா பயணிகள் பாதுகாப்பாக மீட்கப்பட்டனர்.
பாரமுல்லா மாவட்டத்தில் அமைந்துள்ள குல்மார்க், ஜம்மு – காஷ்மீரின் முக்கிய சுற்றுலா தலங்களில் ஒன்றாகும். கடல் மட்டத்திலிருந்து சுமார் 8,700 அடி உயரத்தில் அமைந்துள்ள இந்த மலைப்பகுதி, கோடை மற்றும் குளிர்காலங்களில் ஆயிரக்கணக்கான சுற்றுலா பயணிகளை ஈர்த்து வருகிறது.
இங்கு செயல்பட்டு வரும் ‘கோண்டோலா’ கேபிள் கார் சேவை, உலகின் இரண்டாவது மிக உயரமான மற்றும் ஆசியாவின் மிக நீளமான கேபிள் சவாரி சேவையாக கருதப்படுகிறது.
சுமார் 5 கிலோமீட்டர் தூரம் பயணிக்கும் இந்த சேவை, 8,500 அடி முதல் 14,000 அடி உயரம் வரை செல்லும் நிலையில், குல்மார்கின் இயற்கை அழகை ரசிக்க சுற்றுலா பயணிகள் அதிக ஆர்வம் காட்டி வருகின்றனர்.
இந்த நிலையில், நேற்று கேபிள் கார்களில் பயணம் செய்து கொண்டிருந்தபோது தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டதால் சேவை திடீரென நிறுத்தப்பட்டது. இதனால் நடுவானில் சென்றுகொண்டிருந்த 65 கேபிள் கார் பெட்டிகள் பல இடங்களில் நின்றுவிட்டன.
பெண்கள் மற்றும் குழந்தைகள் உள்ளிட்ட 300க்கும் மேற்பட்ட சுற்றுலா பயணிகள் கேபிள் கார் பெட்டிகளுக்குள் சிக்கி பயத்தில் அலறியதாக கூறப்படுகிறது.
தகவல் கிடைத்ததும் தேசிய பேரிடர் மீட்புப் படை, மாநில பேரிடர் மீட்புப் படை மற்றும் உள்ளூர் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்தனர். கயிறு ஏணிகள் மற்றும் சிறப்பு மீட்பு உபகரணங்களின் உதவியுடன், சிக்கியிருந்த அனைவரும் பாதுகாப்பாக மீட்கப்பட்டனர்.
இந்த மீட்பு நடவடிக்கைக்கு பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் பாராட்டு தெரிவித்துள்ளார்.
அவர் தனது சமூக வலைதள பதிவில், “குல்மார்க்கில் கேபிள் கார்களில் சிக்கியிருந்த 300 சுற்றுலா பயணிகளை வெற்றிகரமாக மீட்ட மீட்பு படையினருக்கு பாராட்டு.
இந்திய ராணுவம், ஜம்மு – காஷ்மீர் போலீசார், தேசிய பேரிடர் மீட்புப் படை மற்றும் மாநில பேரிடர் மீட்புப் படை இணைந்து திறமையாக இந்த சவாலான நடவடிக்கையை மேற்கொண்டுள்ளன. அவர்களின் அர்ப்பணிப்பையும் சேவையையும் நாடு முழுவதும் பாராட்டுகிறது” என்று குறிப்பிட்டுள்ளார்.
