சட்டசபையில் நடைபெற்ற நம்பிக்கை ஓட்டெடுப்பு விவாதத்தின் போது, முதல்வர் Vijay பதிலுரை வழங்கினார்.
அப்போது பேசிய அவர், நம்பிக்கை தீர்மானத்தின் மீது பல்வேறு கட்சிகளைச் சேர்ந்த எம்எல்ஏக்கள் ஆதரவும் எதிர்ப்பும் தெரிவித்து கருத்து பதிவு செய்துள்ளதாக குறிப்பிட்டார். விவாதத்தில் பங்கேற்ற அனைத்து உறுப்பினர்களுக்கும் தனது நன்றியை தெரிவித்துக் கொண்டார்.
மேலும், காங்கிரஸ் குறிப்பிட்டதுபோல் இந்த அரசு மதச்சார்பற்ற அரசாகவே செயல்படும் என்றும் உறுதியளித்தார்.
முந்தைய அரசுகள் கொண்டு வந்த மக்கள் நலத்திட்டங்கள் தொடரப்படும் என்றும், தமிழகத்தை ஆண்ட பல்வேறு அரசுகள் மக்கள் நலனை முன்னிறுத்தி செயல்படுத்திய திட்டங்கள் மற்றும் சமூகநீதியை அடிப்படையாகக் கொண்ட சட்டங்களை கருத்தில் கொண்டு இந்த அரசு செயல்படும் என்றும் விஜய் தெரிவித்தார்.
அதேபோல், தங்கள் கட்சியின் கொள்கை தலைவர்களின் சிந்தனைகளையும் வழிகாட்டுதல்களையும் பின்பற்றி ஆட்சி நடத்தப்படும் என்றும் கூறினார்.
“இந்த அரசு குதிரை வேகத்தில் செயல்படும் அரசே தவிர, குதிரை பேரத்தில் ஈடுபடும் அரசு அல்ல என்பதை ஆணித்தரமாக தெரிவித்துக்கொள்கிறேன்” என்று அவர் வலியுறுத்தினார்.
தமிழக முன்னேற்றத்திற்காக உழைத்த தலைவர்களின் கொள்கைகளில் இருந்து சிறிதளவும் விலகாமல் இந்த ஆட்சி நடைபெறும் என்றும் தெரிவித்த அவர், தாம் முன்மொழிந்த நம்பிக்கை தீர்மானத்தை நிறைவேற்றித் தருமாறு சட்டசபை உறுப்பினர்களிடம் கேட்டுக் கொண்டார்.
