அமெரிக்காவின் முன்னணி நாளிதழான நியூயார்க் டைம்ஸ், பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் (PoK) பகுதியை ‘பாகிஸ்தான் காஷ்மீர்’ என குறிப்பிட்டு செய்தி வெளியிட்டதற்கு இந்திய அரசு கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது.
டெல்லியில் செய்தியாளர்களை சந்தித்த வெளியுறவுத் துறை செய்தித் தொடர்பாளர் ரந்தீர் ஜெய்ஸ்வால், ஜம்மு-காஷ்மீர் மற்றும் லடாக் ஆகிய யூனியன் பிரதேசங்கள் இந்தியாவின் பிரிக்க முடியாத அங்கங்கள் என்றும், அவை எப்போதும் இந்தியாவின் பகுதியாகவே இருந்து வருகின்றன என்றும் வலியுறுத்தினார்.
மேலும், இந்தியாவின் அதிகாரப்பூர்வ நிலைப்பாட்டை மதிக்கும் வகையில், அனைத்து நாடுகள், சர்வதேச அமைப்புகள் மற்றும் ஊடகங்கள் அந்தப் பகுதியை சரியான பெயரிலேயே குறிப்பிட வேண்டும் என்று அவர் தெரிவித்தார்.
இதற்கு முன்பாக, அமெரிக்காவில் உள்ள இந்திய தூதரகமும் நியூயார்க் டைம்ஸ் வெளியிட்ட தலைப்புக்கு எதிர்ப்பு தெரிவித்திருந்தது. அந்த அறிக்கையில், ‘பாகிஸ்தான் காஷ்மீர்’ என்ற பெயரில் எந்த பகுதியும் இல்லை. அது பாகிஸ்தான் சட்டவிரோதமாக ஆக்கிரமித்துள்ள இந்தியப் பகுதி என குறிப்பிடப்பட்டிருந்தது.
மேலும், அந்த ஆக்கிரமிப்பு பகுதியில் பாகிஸ்தான் தொடர்ந்து வன்முறையை ஊக்குவித்து வருவதாகவும் இந்திய தூதரகம் குற்றம்சாட்டியுள்ளது.
