டெஹ்ரான்: இஸ்ரேல் மற்றும் ஈரான் இடையே நேற்று காலை பரஸ்பர ஏவுகணை மற்றும் வான்வழித் தாக்குதல்கள் நடைபெற்றதால், மேற்காசியாவில் மீண்டும் முழு அளவிலான போர் வெடிக்கும் அபாயம் ஏற்பட்டது. ஆனால், அதே நாளின் மாலையில் இரு நாடுகளும் தாக்குதல்களை தற்காலிகமாக நிறுத்த ஒப்புக்கொண்டதாக அறிவித்ததால், பிராந்தியத்தில் குழப்பமான சூழ்நிலை நிலவுகிறது.
ஈரான் மீது அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் இணைந்து நடத்தி வரும் போர் 100 நாட்களை கடந்துள்ளது. இந்த மோதலால் முக்கிய கடல் வழித்தடமான ஹார்முஸ் ஜலசந்தி பாதிக்கப்பட்டுள்ளதால், பல நாடுகளில் பெட்ரோலியப் பொருட்களின் விநியோகத்தில் சிக்கல்கள் ஏற்பட்டுள்ளன.
கடந்த ஏப்ரல் 8-ஆம் தேதி அமெரிக்கா மற்றும் ஈரான் தற்காலிக போர் நிறுத்தத்தை அறிவித்திருந்தாலும், நிரந்தர அமைதிக்கான பேச்சுவார்த்தைகள் நடைபெற்று வரும் நிலையில் இடையிடையே தாக்குதல்கள் தொடர்ந்தன.
ஈரானுக்கு ஆதரவாக செயல்படும் லெபனானின் ஹெஸ்பொல்லா அமைப்பின் நிலைகளை குறிவைத்து, நேற்று முன்தினம் பெய்ரூட் தெற்கு புறநகர் பகுதிகளில் இஸ்ரேல் வான்வழித் தாக்குதல் நடத்தியது. இதற்கு பதிலடியாக, ஈரான் தனது நாட்டிலிருந்து இஸ்ரேலின் ராணுவ நிலைகளை குறிவைத்து 10-க்கும் மேற்பட்ட அதிநவீன ஏவுகணைகளை ஏவியது.
எனினும், ஈரானின் ஏவுகணைகள் பெரும்பாலும் இஸ்ரேலின் வான் பாதுகாப்பு அமைப்புகளால் தடுத்து அழிக்கப்பட்டதாக கூறப்படுகிறது.
இதையடுத்து, நேற்று அதிகாலை இஸ்ரேல் போர் விமானங்கள் ஈரானுக்குள் நுழைந்து விரிவான வான்வழித் தாக்குதல்களை மேற்கொண்டன. இந்தத் தாக்குதல்களில் ஈரானின் பாதுகாப்பு அமைப்புகள் மற்றும் பெட்ரோலிய ஆலைகள் சேதமடைந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
போர் நிறுத்த அறிவிப்புக்குப் பின்னரும் இரு தரப்பும் நேரடியாக தாக்குதல்களில் ஈடுபட்டது, மேற்காசியாவில் மீண்டும் பெரிய அளவிலான போர் ஏற்படும் என்ற அச்சத்தை அதிகரித்தது.
இந்த நிலையில், அமெரிக்க அதிபர் Donald Trump, இரு தரப்பும் உடனடியாக தாக்குதல்களை நிறுத்த வேண்டும் என வலியுறுத்தினார். அமைதிக்கான இறுதிக்கட்ட பேச்சுவார்த்தைகள் நடைபெற்று வருவதாகவும், அவற்றை பாதிக்கும் எந்த நடவடிக்கையும் தவிர்க்கப்பட வேண்டும் என்றும் அவர் தெரிவித்தார்.
மேலும், லெபனான் மீதான தாக்குதல்களை இஸ்ரேல் நிறுத்தினால், இஸ்ரேலுக்கு எதிரான தாக்குதல்களை நிறுத்த தயாராக இருப்பதாக ஈரான் தரப்பில் அறிவிக்கப்பட்டது. இதற்கு தற்காலிகமாக சம்மதம் தெரிவித்த இஸ்ரேல், தாக்குதல்களை நிறுத்த ஒப்புக்கொண்டதாக கூறப்படுகிறது.
இதையடுத்து, தனது முயற்சியாலேயே இஸ்ரேல் – ஈரான் இடையே தற்காலிக போர் நிறுத்தம் சாத்தியமானதாக டிரம்ப் சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ளார்.
