குஜராத்: காலத்தால் அழியாத பாரதத்தின் ஆன்மிக உணர்வின் அடையாளமாக சோம்நாத் கோவில் திகழ்கிறது என பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.
குஜராத் மாநிலத்தின் அரபிக்கடல் கரையில் அமைந்துள்ள சோம்நாத் கோவில், கடந்த 1951ஆம் ஆண்டு மே 11ஆம் தேதி அப்போதைய ஜனாதிபதி டாக்டர் ராஜேந்திர பிரசாத் தலைமையில் புதுப்பிக்கப்பட்டு திறந்து வைக்கப்பட்டது.
இந்த கோவில் புதுப்பிக்கப்பட்டு 75 ஆண்டுகள் நிறைவடைந்ததை முன்னிட்டு நடைபெற்ற நிகழ்ச்சியில் பங்கேற்றது தனக்கு மனநிறைவை அளிப்பதாக பிரதமர் மோடி கூறினார்.
மேலும், சோம்நாத் கோவில் மீது நடத்தப்பட்ட முதல் தாக்குதல் சம்பவம் நிகழ்ந்து 1,000 ஆண்டுகள் நிறைவடைந்ததை முன்னிட்டு நடைபெற்ற “சோம்நாத் சுவாபிமான் பர்வ்” எனப்படும் சுயமரியாதை விழாவிலும் பங்கேற்கும் வாய்ப்பு கிடைத்ததாக அவர் குறிப்பிட்டார்.
சோம்நாத் கோவில் இந்திய நாகரிகத்தின் ஆழமான செய்தியை உலகிற்கு எடுத்துக்காட்டுகிறது என்றும், அந்த கோவிலின் முன் பரந்து விரிந்துள்ள அரபிக்கடல் காலங்களை கடந்த உண்மையை நினைவூட்டுகிறது என்றும் பிரதமர் தெரிவித்தார்.
“புயல்கள் எவ்வளவு சீற்றமாக வீசியாலும், அலைகள் எவ்வளவு கொந்தளித்தாலும், மனிதன் எப்போதும் கண்ணியத்துடனும் வலிமையுடனும் மீண்டும் எழுந்து நிற்க முடியும் என்பதே சோம்நாத் கோவில் நமக்கு அளிக்கும் உணர்வு” என்றும் மோடி கூறினார்.
