ஸ்காட்லாந்தின் கிளாஸ்கோவில் நடைபெற்று வரும் 2026 காமன்வெல்த் விளையாட்டுப் போட்டியின் ஆடவர் ஈட்டி எறிதல் இறுதிப்போட்டியில், இந்திய வீரர்கள் நீரஜ் சோப்ரா வெள்ளிப் பதக்கமும், யஷ் வீர் சிங் வெண்கலப் பதக்கமும் வென்று இந்தியாவுக்கு இரட்டை மகிழ்ச்சியைத் தந்துள்ளனர்.
கிளாஸ்கோ ஸ்காட்ஸ்டவுன் மைதானத்தில் நடைபெற்ற இந்த போட்டியில், இலங்கை வீரர் ருமேஷ் தரங்கா பதிரகே தனது இரண்டாவது முயற்சியிலேயே 89.75 மீட்டர் தூரம் ஈட்டி எறிந்து முதலிடத்தைப் பிடித்தார். அந்த சாதனையை இறுதிவரை எந்த வீரரும் முறியடிக்காததால், அவர் தங்கப் பதக்கத்தை கைப்பற்றினார்.
இந்தியாவின் நட்சத்திர வீரர் நீரஜ் சோப்ரா, தனது சிறந்த முயற்சியில் 85.83 மீட்டர் தூரம் எறிந்து வெள்ளிப் பதக்கத்தை வென்றார். கடைசி முயற்சி வரை தங்கத்திற்காக போராடிய அவர், இலங்கை வீரரின் சாதனையை முந்த முடியாமல் போனார்.
மற்றொரு இந்திய வீரரான யஷ் வீர் சிங், போட்டியின் கடைசி முயற்சியில் 85.41 மீட்டர் தூரம் எறிந்து தனது தனிப்பட்ட சிறந்த சாதனையை பதிவு செய்தார். இதன் மூலம் வெண்கலப் பதக்கத்தை வென்றதுடன், ஒரே போட்டியில் இந்தியாவுக்கு இரண்டு பதக்கங்களை உறுதி செய்தார்.
இதற்கிடையில், நடப்பு சாம்பியனும் ஒலிம்பிக் தங்கப் பதக்க வீரருமான பாகிஸ்தான் வீரர் அர்ஷத் நதீம், முதல் மூன்று முயற்சிகளில் அதிகபட்சமாக 77.41 மீட்டர் மட்டுமே எறிந்ததால் முதல் எட்டு இடங்களுக்குள் கூட முன்னேற முடியாமல் போட்டியிலிருந்து வெளியேறினார்.
