ஆரணி: கருணாநிதியை வீட்டுச் சிறையில் வைத்ததாக கூறப்படும் விவகாரம் குறித்து சட்ட ரீதியாக விசாரணை நடத்தப்படும் என்றும், அதில் உண்மை இருப்பது உறுதியானால் அதிமுக அரசு நடவடிக்கை எடுக்கும் என்றும் அதிமுக பொதுச் செயலாளர் இபிஎஸ் தெரிவித்துள்ளார்.
ஆரணி தொகுதியில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பேசிய அவர், ஸ்டாலின் நெல்லையில் கோபத்தையும் எரிச்சலையும் வெளிப்படுத்துகிறார் என்று விமர்சித்தார். தன்னைப் பற்றி ஸ்டாலின் கூறிய கருத்துகளை மறுத்த இபிஎஸ், தாம் சொன்னதை சரியாக கேட்க வேண்டும் என்றும், தேவையற்ற கோபத்தை தன்னிடம் காட்ட வேண்டாம் என்றும் தெரிவித்தார்.
துணை பொதுச் செயலாளர் ராஜா கூறியதாக வெளிவந்த ஆடியோ தான் இந்திய அளவில் வைரலாகியுள்ளது என்றும், அதில் கூறப்பட்ட தகவல்களையே தான் எடுத்துரைத்ததாகவும் அவர் கூறினார். தன்னிடம் கோபப்படுவதால் பயன் இல்லை என்றும், ராஜாவிடம் கேள்வி கேட்டால் உண்மை வெளிவரும் என்ற அச்சம் இருப்பதாகவும் இபிஎஸ் குற்றம்சாட்டினார்.
மேலும், “அப்பாவை சிறையில் வைப்பது நியாயமா? உங்களை உயர்ந்த பதவிகளுக்கு கொண்டு வந்தவர் கருணாநிதி. அவரையே வீட்டுச் சிறையில் வைத்ததாக ராஜா கூறுகிறார்,” என்று தெரிவித்தார். அழகிரியும் இதே கருத்தை கூறியதாகவும், உண்மை வெளிவந்தால் நிலைமை மாறிவிடும் என்றும் அவர் குறிப்பிட்டார்.
அதிமுக ஆட்சிக்கு வந்ததும், ராஜா வெளியிட்ட ஆடியோ குறித்து சட்டப்படி விசாரணை நடத்தப்படும் என்றும், உண்மை நிரூபிக்கப்பட்டால் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் இபிஎஸ் உறுதியளித்தார்.
மேலும், ஜெயலலிதா மரணம் குறித்து 2021 தேர்தலில் விசாரணை நடத்துவதாக கூறியதை நினைவுபடுத்திய அவர், அதேபோல் கருணாநிதி விவகாரத்திலும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றார். “ஒரு முன்னாள் முதல்வருக்கு இப்படியான நிலை என்றால், பொதுமக்களின் நிலை என்ன ஆகும்?” என்று கேள்வி எழுப்பினார்.
மெரினாவில் அடக்கம் செய்ய இடம் வழங்குவது குறித்து எழுந்த குற்றச்சாட்டுகளுக்கும் பதிலளித்த இபிஎஸ், கருணாநிதி எடுத்த முடிவுகளின் அடிப்படையிலேயே தானும் முடிவு எடுத்ததாக விளக்கினார். முன்னாள் முதல்வர்களுக்கு வழங்கப்பட்ட நடைமுறைகளை பின்பற்றியே கிண்டியில் 2 ஏக்கர் நிலம் வழங்கியதாகவும், அதனை மறுத்து நீதிமன்றம் சென்றது உண்மை என்றும் தெரிவித்தார்.
