புதுடில்லி: அமெரிக்கா மற்றும் ஈரான் இடையிலான பேச்சுவார்த்தை வெற்றிகரமாக நிறைவடைந்து அமைதி ஒப்பந்தம் எட்டப்பட்டதைத் தொடர்ந்து, சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை கணிசமாக சரிந்துள்ளது. மத்திய கிழக்கில் நிலவிய பதற்றம் குறைந்ததால், ஒரு பேரல் கச்சா எண்ணெய் விலை 4 சதவீதம் வரை குறைந்து 84 டாலருக்கும் கீழே வீழ்ச்சியடைந்தது.
WTI எனப்படும் அமெரிக்க கச்சா எண்ணெயின் விலையும் 4 சதவீதத்திற்கும் அதிகமாக குறைந்துள்ளது. அமைதி ஒப்பந்தம் இறுதி செய்யப்பட்டதைத் தொடர்ந்து, உலகின் முக்கியமான வர்த்தகப் பாதைகளில் ஒன்றான ஹார்முஸ் ஜலசந்தி மீண்டும் திறக்கப்படவுள்ளதாக சந்தையில் நம்பிக்கை உருவாகியுள்ளது.
இதன் காரணமாக உலகளாவிய கச்சா எண்ணெய் விநியோகம் சீராகும் என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளதால், எண்ணெய் விலையில் குறிப்பிடத்தக்க சரிவு ஏற்பட்டுள்ளது. இந்தியா தனது கச்சா எண்ணெய் தேவையில் 85 சதவீதத்திற்கும் அதிகமான அளவை இறக்குமதி செய்து வரும் நிலையில், இந்த விலை குறைவு அந்நிய செலாவணி செலவைக் குறைப்பதுடன், பணவீக்கத்தையும் கட்டுப்படுத்த உதவும் என பொருளாதார நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.
