சென்னை: போடிநாயக்கனூர் சட்டமன்றத் தொகுதியில் திமுக வேட்பாளராக முன்னாள் முதல்வர் ஓ. பன்னீர்செல்வம் அறிவிக்கப்பட்டுள்ளார்.
அதிமுகவில் எடப்பாடி கே. பழனிசாமி உடன் ஏற்பட்ட மோதலால் கட்சியில் இருந்து நீக்கப்பட்ட ஓபிஎஸ், மீண்டும் கட்சியில் சேர பல முயற்சிகள் எடுத்தும் வெற்றி பெறவில்லை. இதனால் ஏற்பட்ட அதிருப்தி மற்றும் விரக்தி காரணமாக, கடந்த பிப்ரவரி 27ஆம் தேதி தனது மகன் ரவீந்தரநாத் உடன் திமுகவில் இணைந்தார்.
திமுக தலைவர் வாய்ப்பு வழங்கினால் போடி தொகுதியில் போட்டியிடத் தயாராக இருப்பதாக ஓபிஎஸ் முன்பே தெரிவித்திருந்தார். அதன்படி, திமுகவை ஆதரித்து மற்றும் இபிஎஸை விமர்சித்து பல்வேறு மேடைகளில் பேசியும் வந்தார்.
இந்நிலையில், எதிர்பார்த்தபடி போடிநாயக்கனூர் தொகுதியில் திமுக சார்பில் ஓபிஎஸுக்கு சீட் வழங்கப்பட்டுள்ளது. முன்னதாக அதிமுகவின் தீவிர ஆதரவாளராக இருந்த அதே தொகுதியில், தற்போது திமுக வேட்பாளராக அவர் உதயசூரியன் சின்னத்தில் வாக்கு கேட்டு பிரசாரம் செய்ய உள்ளார்.
இதே தொகுதியில் அதிமுக சார்பில் வி.டி. நாராயணசாமியை வேட்பாளராக அறிவித்துள்ளார் இபிஎஸ்.
இதனைத் தொடர்ந்து, சமீபத்தில் கட்சி மாறிய வைத்திலிங்கம் ஒரத்தநாடு தொகுதியிலும், மனோஜ் பாண்டியன் ஆலங்குளம் தொகுதியிலும் திமுக சார்பில் போட்டியிட வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
