கோவை: முதல்வர் மு.க. ஸ்டாலின் எல்லாவற்றிலும் அரசியல் செய்ய முயற்சி செய்கிறார் என தமிழக பாஜ முன்னாள் தலைவர் கே. அண்ணாமலை குற்றம் சாட்டியுள்ளார்.
கோவை சிங்காநல்லூர் தொகுதியில் அதிமுக வேட்பாளர் கே.ஆர். ஜெயராமனை ஆதரித்து நடைபெற்ற தேர்தல் பிரசாரத்தில் அண்ணாமலை பேசினார். தமிழகத்திற்கு மத்திய அரசு நிதி வழங்கவில்லை என முதல்வர் பொய்யான பிரசாரம் செய்கிறார் என்றும், தமிழகத்திற்கு ஒதுக்கப்பட்ட நிதிக்கு ஆதாரம் இருப்பதாகவும் அவர் தெரிவித்தார். முதல்வர் ஸ்டாலின் எல்லாவற்றிலும் அரசியல் செய்ய முயற்சி செய்கிறார் என விமர்சித்தார்.
தமிழக மக்கள் கொண்டு வரப்பட உள்ள பெண்களுக்கு 33% இட ஒதுக்கீட்டை வரவேற்கின்றனர் என்றும் அண்ணாமலை கூறினார். மேலும், ராகுல் காந்தி தமிழகத்திற்கு வர தயாராக இல்லை என்றும், தேர்தல் முடிவுகள் முன்பே தெரிந்துவிட்டதாகவும் விமர்சித்தார். கடல் அல்லது குளம் இருக்கும் ஊருக்குத்தான் ராகுல் வருவார் என்றும் அவர் தெரிவித்தார்.
திமுக-காங்கிரஸ் கூட்டணியை ஆமை புகுந்த வீடு போல உள்ளது எனவும், 1985ல் ஹிந்தி எதிர்ப்பு போராட்டத்தின் போது காங்கிரசை திமுக எதிர்த்தது என்றும் அவர் கூறினார். இலங்கையில் தமிழர்கள் இனப்படுகொலை செய்யப்பட்ட போது மத்தியில் காங்கிரஸ் ஆட்சி இருந்தது என்றும், 1965ல் காங்கிரசை எதிர்த்த திமுக 1970ல் கூட்டணி வைத்தது என்றும் தெரிவித்தார்.
மேலும், கட்சித் தீவை தாரை வார்த்த போது மத்தியில் காங்கிரஸ், மாநிலத்தில் திமுக ஆட்சி இருந்தது என்றும், தமிழகத்தில் இருந்து திமுக ஆட்சி அகற்றப்படப் போகிறது என்றும், கொங்கு மண்டலத்தில் உள்ள 27 தொகுதிகளையும் அதிமுக கூட்டணி வெல்லும் என அண்ணாமலை தெரிவித்தார்.
