புதுடில்லி: Narendra Modi, அடுத்த மாதம் சட்டசபை தேர்தல் நடைபெற உள்ள மாநிலங்களைத் தவிர்த்து, அனைத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேச முதல்வர்களுடன் இன்று ‘வீடியோ கான்பரன்ஸ்’ வாயிலாக முக்கிய ஆலோசனை நடத்துகிறார்.
மேற்காசிய பிராந்தியத்தில் நிலவி வரும் போர் பதற்றம் காரணமாக, எரிபொருள் விநியோகத்தில் பாதிப்பு ஏற்படும் அபாயம் அதிகரித்துள்ளது. ஈரான் மீது அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் கடந்த மாதம் 28ஆம் தேதி முதல் தாக்குதல் நடத்தி வருகின்றன. இதற்கு பதிலடியாக, சவுதி அரேபியா, ஐக்கிய அரபு எமிரேட்ஸ் உள்ளிட்ட வளைகுடா நாடுகளில் உள்ள அமெரிக்க தளங்களை ஈரான் தாக்கி வருகிறது.
இந்த போர் சூழ்நிலையால், இந்தியாவில் கச்சா எண்ணெய் மற்றும் எரிவாயு தட்டுப்பாடு ஏற்படுமோ என்ற அச்சம் எழுந்துள்ளது. இதனை முன்னிட்டு, மத்திய அரசு முன்தினம் அனைத்துக் கட்சி கூட்டத்தை நடத்தி, இந்த பிரச்சினையில் ஒருமித்த நிலைப்பாட்டை கடைப்பிடிக்க முடிவு செய்தது.
இந்நிலையில், தற்போதைய சூழலை சமாளிக்கும் நடவடிக்கைகள் குறித்து மாநிலங்களுடன் இணைந்து செயல்படுவதற்காக, பிரதமர் இன்று மாலை ஆலோசனை நடத்துகிறார். இதில், மத்திய அரசு எடுத்துள்ள நடவடிக்கைகள் மற்றும் மாநிலங்கள் மேற்கொள்ள வேண்டிய திட்டங்கள் குறித்து விவாதிக்கப்பட உள்ளது.
மேலும், மாநிலங்களின் தயார்நிலை மற்றும் எதிர்கால செயல் திட்டங்களை ஆய்வு செய்வதும் இந்த ஆலோசனையின் முக்கிய அம்சமாகும். தற்போதைய சூழலில் ‘டீம் இந்தியா’ என்ற ஒரே அணியாக செயல்படுவது அவசியம் என மத்திய அரசு வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
அடுத்த மாதம் தேர்தல் நடைபெற உள்ள தமிழகம், கேரளா, மேற்கு வங்கம், அசாம் மற்றும் புதுச்சேரியில் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலில் இருப்பதால், அந்த மாநிலங்களின் முதல்வர்கள் இந்த கூட்டத்தில் பங்கேற்க மாட்டார்கள். அதற்கு பதிலாக, அந்த மாநிலங்களின் தலைமைச் செயலர்களுடன் மத்திய அமைச்சரவை செயலகம் தனியாக ஆலோசனை நடத்த திட்டமிட்டுள்ளது.
