“எங்கே போனது சிங்கப்பெண் அதிரடிப்படை?” – முதல்வர் விஜய்க்கு உதயநிதி கேள்வி
சென்னை: “இது தமிழகமா, உத்தரப் பிரதேசமா? எங்கே போனது உங்க சிங்கப்பெண் அதிரடிப்படை?” என்று முதல்வர் விஜயை எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி கடுமையாக விமர்சித்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:
“மாற்றம், மாற்றம் என்று கூறியவர்களின் ஆட்சியில் தமிழகத்தின் சட்டம் ஒழுங்கே மாறி இருக்கிறது.
கோவை சூலூரில் சிறுமிக்கு நடந்த கொடூர சம்பவத்தின் அதிர்ச்சியில் இருந்து மக்கள் மீளாத நிலையில், விழுப்புரம் மாவட்டத்தில் மற்றொரு சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு ஆளாகியுள்ளார்.
சூலூர் சிறுமியின் தாயிடம் தெரிவிக்காமல் அவசரமாக உடல் தகனம் செய்யப்பட்டதாகவும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
மதுரை மீனாட்சி அம்மன் கோவில் அருகே சிறுவன் ஒருவர் படுகொலை செய்யப்பட்டுள்ளார். கோவையில் இளம்பெண் வீட்டின் மீது பெட்ரோல் குண்டு வீசப்பட்ட சம்பவமும் நடைபெற்றுள்ளது.
முதல்வரின் தொகுதியான பெரம்பூரில், 13 வாகனங்களின் கண்ணாடிகளை உடைத்து போதை கும்பல் அட்டூழியம் செய்துள்ளது.
இது தமிழகமா, உத்தரப் பிரதேசமா? எங்கே போனது உங்களது சிங்கப்பெண் அதிரடிப்படை?” என்று அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.
மேலும், “அதிகரித்து வரும் குற்றச்சம்பவங்களால் பொதுமக்கள் அச்சத்தில் வாழும் சூழல் ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில் கண்துடைப்புக்காக போலீஸ் அதிகாரிகள் கூட்டம் நடத்தி பொதுவான அறிக்கைகள் வெளியிடுவதை ஏற்க முடியாது” என்றும் தெரிவித்துள்ளார்.
பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களை தடுக்க அரசு என்ன ஆக்கப்பூர்வ நடவடிக்கைகள் எடுக்கப் போகிறது என்பதை முதல்வர் நேரடியாக விளக்க வேண்டும் என்றும் உதயநிதி தனது அறிக்கையில் வலியுறுத்தியுள்ளார்.
