“எங்கள் முன் அனைவரும் சமம்” – உச்சநீதிமன்றம்
காங்கிரஸ் எம்பி ராகுல் தொடர்பான அவதூறு வழக்கில், “எங்கள் முன் அனைவரும் சமம்” என்று உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது.
கடந்த 2022-ம் ஆண்டு ராகுல் பாரத் ஜோடோ யாத்திரை மேற்கொண்டபோது, டிசம்பர் 16-ம் தேதி செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது, எல்லையில் சுமார் 2 ஆயிரம் சதுர கிலோமீட்டர் நிலத்தை சீனா ஆக்கிரமித்துள்ளதாகவும், அருணாச்சலப் பிரதேசத்தில் இந்தியா – சீனா ராணுவத்தினருக்கு இடையே மோதல் ஏற்பட்டதாகவும் அவர் கூறியிருந்தார்.
ராகுல் மீது வழக்கு
ராகுலின் இந்த கருத்துகள் தொடர்பாக எல்லை சாலைகள் அமைப்பின் (BRO) முன்னாள் இயக்குனர் உதய் சங்கர் ஸ்ரீவஸ்தவா, லக்னோவில் உள்ள எம்.பி., எம்.எல்.ஏ.க்களுக்கான சிறப்பு நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.
இந்திய ராணுவத்தை அவமதிக்கும் வகையில் ராகுல் பேசியதாக தனது மனுவில் அவர் குறிப்பிட்டிருந்தார்.
இந்த வழக்கில் ராகுல், லக்னோ நீதிமன்றத்தில் ஜாமின் பெற்றார். தொடர்ந்து, வழக்கை ரத்து செய்யக் கோரி அலகாபாத் உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். அந்த மனுவை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்ததைத் தொடர்ந்து, ராகுல் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ளார்.
மேல்முறையீட்டு மனு விசாரணை
இந்த வழக்கு தொடர்பான மேல்முறையீட்டு மனு, உச்சநீதிமன்றத்தில் விசாரணைக்காக பட்டியலிடப்படவில்லை என உதய் சங்கர் ஸ்ரீவஸ்தவா தரப்பு வழக்கறிஞர் கவுரவ் பாட்டியா தெரிவித்துள்ளார்.
தலைமை நீதிபதி சூர்யகாந்த் மற்றும் நீதிபதிகள் ஜாய்மால்யா பக்ஷி, மோகனா ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு ஆஜரான அவர், ராகுல் விவிஐபி கிடையாது என்றும், ஐந்து மாதங்களுக்கு முன்பு மேல்முறையீட்டு மனு பட்டியலிடப்பட்டபோதும் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படவில்லை என்றும் தெரிவித்தார்.
மேலும், இந்த விவகாரம் நீதிமன்றத்திற்கு நல்ல பெயரை ஏற்படுத்தாது என்றும் அவர் குறிப்பிட்டார்.
“நடைமுறைகளை பின்பற்றுவோம்”
இதற்கு பதிலளித்த நீதிபதிகள், “நடைமுறைகளை பின்பற்றுவோம். எங்கள் முன் அனைவரும் சமம்” என்று தெரிவித்தனர்.
மேலும், வழக்கை விரைவாக விசாரிக்கக் கோரி மனு தாக்கல் செய்யுமாறு உதய் சங்கர் ஸ்ரீவஸ்தவா தரப்புக்கு அறிவுறுத்திய நீதிபதிகள், அந்த மனுவை எடுத்துக்கொண்டு விசாரிப்பதாக தெரிவித்தனர்.
