தூத்துக்குடி: “எங்கள் ஓட்டு உங்களுக்கு கிடையாது” என்று கூறி, முஸ்லிம் பெண்கள் பிரசார வாகனத்தை மறித்து வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் தொகுதியில் ஆறு முறை தொடர்ந்து வெற்றி பெற்ற மீன்வளத்துறை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன், தற்போது ஏழாவது முறையாக தி.மு.க. சார்பில் போட்டியிடுகிறார்.
கடந்த ஏப்ரல் 6ஆம் தேதி முதல் அவர் தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறார். எனினும், அவர் செல்லும் இடங்களில் பல இடங்களில் எதிர்ப்பு கிளம்பி வருகிறது.
கல்விளை, கோட்டூர், ஆறுமுகனேரி உள்ளிட்ட பகுதிகளில் அவர் சென்றபோது, தங்கள் பகுதியில் எந்த திட்டங்களும் செயல்படுத்தப்படவில்லை என்று கூறி உள்ளூர் மக்கள் அவரது வாகனத்தை மறித்தனர்.
இந்நிலையில், காயல்பட்டினம் நகராட்சி பகுதியில் அவர் பிரசாரம் மேற்கொண்டார். அங்கு முஸ்லிம் மக்கள் அதிகம் வசிக்கும் பகுதியில் அவரது வாகனம் சென்றபோது, சில பெண்கள் வாகனத்தை மறித்து தெருவிற்குள் அனுமதிக்க மறுத்தனர்.
மழை மற்றும் வெள்ள பாதிப்புகளின் போது எந்த அடிப்படை வசதிகளும் செய்யப்படவில்லை என்றும், முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்படவில்லை என்றும் அவர்கள் குற்றஞ்சாட்டினர்.
“எங்கள் ஓட்டு உங்களுக்கு கிடையாது; திரும்பிச் செல்லுங்கள்” என்று பெண்கள் கோஷமிட்டனர்.
அவர்களுடன் அமைச்சர் பேச்சுவார்த்தை நடத்த முயன்றபோதிலும், “எங்கள் தெருவிற்குள் வராதீர்கள்” என்று பெண்கள் வலியுறுத்தினர்.
இதனால், நீண்ட நேரம் காத்திருந்த அமைச்சர் அங்கிருந்து திரும்பிச் சென்றார்.
தொகுதிக்குள் அவர் செல்லும் இடமெல்லாம் எதிர்ப்பு கிளம்பி வரும் நிலையில், தற்போது முஸ்லிம் மக்கள் அதிகம் வசிக்கும் பகுதிகளிலும் எதிர்ப்பு கிளம்பி இருப்பது அரசியல் வட்டாரங்களில் அதிர்வலை ஏற்படுத்தியுள்ளது.
