உலக சந்தையில் ஈரானின் கச்சா எண்ணெயை விற்பனை செய்ய 30 நாட்களுக்கு அமெரிக்கா அனுமதி வழங்கியுள்ளது.
ஈரான் மீது அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் மேற்கொண்டுள்ள போரின் காரணமாக உலகளவில் எண்ணெய் விலைகள் உயர்ந்துள்ள நிலையில், அதனை கட்டுப்படுத்தும் முயற்சியாக இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. அமெரிக்க அதிபர் டிரம்ப் தலைமையிலான நிர்வாகம், கடல் வழியாக ஈரானின் கச்சா எண்ணெயை வாங்குவதற்கான தடைகளை 30 நாட்களுக்கு தளர்த்தியுள்ளது.
இந்த அனுமதியின் மூலம், தற்போது கப்பல்களில் தேங்கியுள்ள சுமார் 14 கோடி பீப்பாய் கச்சா எண்ணெய் உலக சந்தைக்கு வரலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதுகுறித்து அமெரிக்க கருவூலச் செயலாளர் பெசென்ட் வெளியிட்டுள்ள பதிவில், உலகளாவிய பயங்கரவாதத்தின் மையமாக ஈரான் உள்ளது என்றும், அதிபர் டிரம்பின் ‘ஆபரேஷன் எபிக் பியூரி’ நடவடிக்கையால் எதிர்பார்த்ததை விட வேகமாக முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
மேலும், உலகளாவிய எரிசக்தி உள்கட்டமைப்புக்கு எதிரான தாக்குதல்களுக்கு பதிலளிக்கும் வகையில், உலக எரிசக்தி விநியோகத்தை அதிகரித்து, சந்தை நிலைத்தன்மையை உறுதிப்படுத்த அமெரிக்கா தனது பொருளாதார மற்றும் ராணுவ வலிமையை பயன்படுத்தும் என்றும் கூறியுள்ளார்.
கடலில் தேங்கியுள்ள ஈரான் எண்ணெயை விற்பனை செய்ய இந்த குறுகிய கால அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இதன் மூலம் 14 கோடி பீப்பாய் எண்ணெய் விரைவாக உலக சந்தைகளுக்கு கொண்டு வரப்படும் என கூறப்படுகிறது.
இதுவரை டிரம்ப் நிர்வாகம் 440 மில்லியன் கூடுதல் பீப்பாய் எண்ணெயை உலக சந்தைக்கு கொண்டு வர நடவடிக்கை எடுத்துள்ளதாகவும், அமெரிக்காவில் எண்ணெய் மற்றும் எரிவாயு உற்பத்தி அதிகரித்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனால் எரிசக்தி பாதுகாப்பு வலுப்பெற்று, எரிபொருள் செலவுகள் குறைந்துள்ளன. தற்போதைய குறுகிய கால சவால்கள், நீண்ட காலத்தில் அமெரிக்கர்களுக்கு பொருளாதார நன்மையாக மாறும் என்றும் பெசென்ட் தெரிவித்துள்ளார்.
