டெஹ்ரான்: ஈரான் புதிய உச்ச தலைவர் மொஜ்தபா கமேனி உயிருடன் இருக்கிறாரா என்ற அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் எழுப்பிய சந்தேகத்துக்கு பதிலாக, கமேனி கைப்பட எழுதியதாக கூறப்படும் கடிதம் வெளியாகியுள்ளது.
அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் இணைந்து ஈரானுக்கு எதிராக மேற்கொண்ட தாக்குதல்கள் ஒரு மாதத்தை கடந்துள்ளன. இந்த தாக்குதலின் தொடக்கத்தில், ஈரான் உச்ச தலைவர் அயதுல்லா அலி கமேனி கொல்லப்பட்டதாக தகவல்கள் வெளியான நிலையில், அவரது மகன் மொஜ்தபா கமேனி புதிய உச்ச தலைவராக பொறுப்பேற்றார்.
அதே நேரத்தில், தாக்குதலில் மொஜ்தபா கமேனியும் காயமடைந்ததாகவும், ரகசிய இடத்தில் சிகிச்சை பெற்று வருவதாகவும் தகவல்கள் பரவின. பின்னர், அவர் சார்பில் வெளியான அறிக்கைகள் மற்றும் ஆடியோ செய்திகளே வெளிவந்ததால், அவரது நிலை குறித்து சந்தேகம் அதிகரித்தது.
இந்த நிலையில், “ஈரானுடன் பேச்சுவார்த்தை நடத்துகிறோம்; ஆனால் புதிய உச்ச தலைவருடன் நேரடியாக பேசுகிறோமா என்பது தெரியவில்லை. அவர் உயிருடன் உள்ளாரா என்பதும் உறுதி இல்லை,” என டொனால்டு டிரம்ப் தெரிவித்திருந்தார்.
இதையடுத்து, மொஜ்தபா கமேனி கைப்பட எழுதியதாக கூறப்படும் கடிதம் வெளியிடப்பட்டது. அதில், அமெரிக்கா மற்றும் இஸ்ரேலுக்கு எதிரான போரில் ஈரானுக்கு ஆதரவாக நிற்கும் ஈராக் அரசுக்கும் மக்களுக்கும் நன்றி தெரிவித்துள்ளார்.
மேலும், ஈரான் மீது நடத்தப்படும் தாக்குதலுக்கு எதிராக உறுதியான நிலைப்பாடு எடுத்த ஈராக் ஷியா மத தலைவர் அயதுல்லா அலி சிஸ்தானியை அவர் பாராட்டியுள்ளார்.
இருப்பினும், மொஜ்தபா கமேனி இதுவரை பொதுவெளியில் நேரடியாக தோன்றவில்லை. அவரது தகவல்கள் அறிக்கைகள் அல்லது ஆடியோ வடிவில் மட்டுமே வெளியாகி வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.
