உயர்சிறப்பு (Super Speciality) மருத்துவப் படிப்புகளுக்கான இடங்களில் தமிழக மருத்துவர்களின் உரிமைகளை பாதுகாக்க தவெக அரசு முக்கிய நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளதாகவும், இதன் மூலம் மாநிலத்தின் உரிமைகள் மீட்டெடுக்கப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் அருண்ராஜ் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், கடந்த ஆட்சிக்காலத்தில் நிரப்பப்படாத உயர்சிறப்பு மருத்துவ இடங்கள் எந்த நிபந்தனையும் இன்றி அகில இந்திய ஒதுக்கீட்டிற்கு (All India Quota) ஒப்படைக்கப்பட்டதால், தமிழக அரசு மருத்துவர்களின் வாய்ப்புகள் பாதிக்கப்பட்டதாக குற்றம்சாட்டியுள்ளார்.
கடந்த ஆண்டுகளில் 2024-ஆம் ஆண்டு 119 இடங்களும், 2025-ஆம் ஆண்டு 145 இடங்களும் அகில இந்திய ஒதுக்கீட்டிற்கு மாற்றப்பட்டதாக அவர் குறிப்பிட்டுள்ளார். இதனால் தமிழக மருத்துவர்களுக்கு கிடைக்க வேண்டிய வாய்ப்புகள் குறைந்ததாகவும் தெரிவித்துள்ளார்.
இந்த ஆண்டு காலியாக இருந்த 151 உயர்சிறப்பு மருத்துவ இடங்களை உடனடியாக ஒப்படைக்காமல், தகுதி மதிப்பெண் (Cut-off) குறைக்கப்படாது என்ற உறுதியான உத்தரவாதம் கிடைத்தால் மட்டுமே அவற்றை ஒப்படைக்க வேண்டும் என்ற நிலைப்பாட்டை தமிழக அரசு எடுத்ததாக அவர் கூறியுள்ளார்.
இதற்காக தமிழக அரசு உச்சநீதிமன்றத்தில் சட்டப்போராட்டம் நடத்தியதாகவும், அதன் விளைவாக ஜூலை 28, 2026 அன்று வழங்கப்பட்ட உச்சநீதிமன்ற உத்தரவு தமிழகத்திற்கு சாதகமாக அமைந்துள்ளதாகவும் அமைச்சர் தெரிவித்தார்.
அந்த உத்தரவின்படி, நிரப்பப்படாத 151 உயர்சிறப்பு மருத்துவ இடங்கள் DGHS-க்கு திருப்பி ஒப்படைக்கப்பட்டு, அதே தகுதி மதிப்பெண் அடிப்படையில் இரண்டாம் கட்ட கலந்தாய்வு நடத்தப்பட வேண்டும் என நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
மேலும், எதிர்காலத்தில் தகுதி மதிப்பெண் குறைக்கப்பட்டு காலியாக உள்ள இடங்கள் நிரப்பப்பட வேண்டிய சூழல் ஏற்பட்டால், அவற்றில் 50 சதவீத இடங்கள் தமிழக அரசிற்கே திருப்பி வழங்கப்பட வேண்டும் என்ற முக்கிய பாதுகாப்பையும் உச்சநீதிமன்றம் வழங்கியுள்ளதாக அவர் கூறியுள்ளார்.
தமிழக மருத்துவர்களின் நலன் மற்றும் மாநில உரிமைகளை பாதுகாப்பதில் தவெக அரசு உறுதியாக செயல்பட்டு வருவதாகவும், இனி மருத்துவக் கல்வி உரிமைகளில் சமரசம் இருக்காது என்றும் அமைச்சர் அருண்ராஜ் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
