வாஷிங்டன்: ஈரானின் ஏவுகணை மற்றும் ட்ரோன் தாக்குதல்கள் கணிசமாக குறைந்துள்ளதாக அமெரிக்கா தெரிவித்துள்ள நிலையில், இன்னும் பெரிய தாக்குதல் நடத்தும் வாய்ப்பு இருப்பதாக நிபுணர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
மேற்காசியாவில், அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் இணைந்து ஈரான் மீது நடத்தி வரும் தாக்குதல் மூன்றாவது வாரமாக நீடித்து வருகிறது. இந்த மோதலில் இரு தரப்பினரும் தாக்குதலை அதிகரித்துள்ளனர்.
அமெரிக்க ராணுவ அமைச்சர் பீட் ஹெக்செத் செய்தியாளர்களிடம் கூறுகையில், ஈரானின் ஏவுகணை தாக்குதல் 90 சதவீதமும், ட்ரோன் தாக்குதல் 95 சதவீதமும் குறைந்துவிட்டதாக தெரிவித்தார். மேலும், ஈரானின் பாலிஸ்டிக் ஏவுகணை உற்பத்தி மையங்கள் அழிக்கப்பட்டதால், புதிய ஏவுகணைகளை தயாரிக்கும் திறன் பாதிக்கப்பட்டுள்ளது என்றும் கூறினார்.
அதேபோல், ஈரானின் கடற்படை மற்றும் விமானப்படை திறன்களும் செயலிழக்கச் செய்யப்பட்டுள்ளதாகவும், தற்போது ஈரான் தற்காப்பு பலம் குறைந்த நிலையில் உள்ளதாகவும் அவர் விளக்கினார்.
ஆனால், இந்த நிலைப்பாட்டுக்கு மாறாக, ராணுவ நிபுணர்கள் மற்றும் ஆய்வாளர்கள் வேறுபட்ட கருத்தை வெளியிட்டுள்ளனர். ஈரான் தனது அனைத்து ஆயுதங்களையும் பயன்படுத்தாமல், நிலத்தடி சுரங்கங்களில் பதுக்கி வைத்து, ஒரு பெரிய இறுதி தாக்குதலுக்காக காத்திருக்கலாம் என அவர்கள் எச்சரிக்கின்றனர்.
ஈரான் ஒரே நேரத்தில் தனது மீதமுள்ள ஆயுதங்களை பயன்படுத்தினால், அது மேற்காசிய நாடுகளின் எரிசக்தி அமைப்புகளையும், உலக பொருளாதாரத்தையும் கடுமையாக பாதிக்கக்கூடும் என நிபுணர்கள் கூறுகின்றனர்.
இதற்கு பதிலளித்த அமெரிக்க தரப்பு, எந்தவொரு மறைமுக தாக்குதலையும் முன்கூட்டியே தடுக்கத் தயாராக உள்ளதாக தெரிவித்துள்ளது. பதுக்கி வைக்கப்பட்டுள்ள ஆயுதங்கள் ஏவப்படுவதற்கு முன்பே அவற்றை அழிக்கும் வகையில், பெரிய அளவிலான தாக்குதல் திட்டம் தயாராக இருப்பதாக பீட் ஹெக்செத் கூறினார்.
