டெஹ்ரான்: கத்தார் உள்ளிட்ட வளைகுடா நாடுகளில் உள்ள எண்ணெய் மற்றும் எரிவாயு உற்பத்தி நிலையங்களை குறிவைத்து ஈரான் நடத்திய தாக்குதலின் தாக்கமாக, சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் மற்றும் எரிவாயு விலைகள் கடுமையாக உயர்ந்துள்ளன.
அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் இணைந்து ஈரான் மீது பிப்ரவரி 28ஆம் தேதி தொடங்கிய தாக்குதல்கள் மூன்றாவது வாரமாக நீடித்து வருகின்றன. இதற்கு பதிலடியாக, ஈரான் மேற்காசியாவில் உள்ள அமெரிக்க ராணுவ தளங்கள் மற்றும் எரிசக்தி கட்டமைப்புகளை குறிவைத்து தாக்குதல் நடத்தி வருகிறது.
இந்நிலையில், உலகின் மிகப்பெரிய இயற்கை எரிவாயு உற்பத்தி மையங்களில் ஒன்றான சவுத் பார்ஸ் மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்தியது. இதனால் ஆத்திரமடைந்த ஈரான், கத்தாரில் உள்ள ராஸ் லபான் எரிவாயு நிலையத்தை ஏவுகணை மூலம் தாக்கியது. இதில் ஏற்பட்ட தீ விபத்தால் உற்பத்தி கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.
கத்தார் எரிசக்தி அமைச்சர் சாத் அல் காபி கூறுகையில், இந்த தாக்குதல் நாட்டின் எல்.என்.ஜி. ஏற்றுமதி திறனில் 17 சதவீத இழப்பை ஏற்படுத்தியுள்ளதாக தெரிவித்தார். இதனால் ஆசிய மற்றும் ஐரோப்பிய சந்தைகளுக்கு விநியோகம் பாதிக்கப்படும் அபாயம் உருவாகியுள்ளது.
மேலும், சவுதி அரேபியாவின் சாம்ரெப் எண்ணெய் உற்பத்தி மையம், குவைத்தில் உள்ள மினா அல் அகமதி சுத்திகரிப்பு நிலையம், மற்றும் ஐக்கிய அரபு எமிரேட்சின் ஹப்சான் எரிவாயு நிலையம் ஆகியவை தாக்குதலுக்கு உள்ளாகியுள்ளன.
இந்த தாக்குதல்களின் தாக்கமாக, ப்ரென்ட் கச்சா எண்ணெய் விலை 6 சதவீதம் உயர்ந்து, ஒரு பேரல் 114 அமெரிக்க டாலராக உயர்ந்துள்ளது. இது பிப்ரவரி 28ம் தேதியுடன் ஒப்பிடுகையில் 57 சதவீதம் அதிகரிப்பு ஆகும். இதேபோல், ஆசிய சந்தையில் இயற்கை எரிவாயு விலை இரட்டிப்பாகியுள்ளது.
இந்தியாவும் இந்த நிலைமையால் பாதிக்கப்படக்கூடும். 2024ஆம் ஆண்டில் இந்தியா இறக்குமதி செய்த 2.7 கோடி டன் எரிவாயுவில், 47 சதவீதம் கத்தாரிலிருந்து பெற்றது. தற்போது அங்கு உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளதால், இந்தியாவுக்கான விநியோகம் குறைய வாய்ப்பு உள்ளது.
இதன் காரணமாக, சி.என்.ஜி., பயன்படுத்தும் வாகனங்கள், தொழில்துறைகள் மற்றும் வீடுகள் மாற்று எரிபொருளை பயன்படுத்த வேண்டிய நிலை உருவாகலாம் என நிபுணர்கள் எச்சரிக்கின்றனர்.
