ஜெருசலம்: போர்நிறுத்த ஒப்பந்தம் அமலுக்கு வந்த பிறகு முதல்முறையாக, Iran நேரடியாக Israel மீது ஏவுகணை தாக்குதல் நடத்தியதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதனால் மேற்காசியாவில் மீண்டும் பதற்றமான சூழல் உருவாகியுள்ளது.
நேற்றிரவு ஈரானில் இருந்து பாலிஸ்டிக் ஏவுகணைகள் ஏவப்பட்டதைத் தொடர்ந்து, வடக்கு இஸ்ரேலின் பல பகுதிகளில் விமானத் தாக்குதல் எச்சரிக்கை சைரன்கள் ஒலித்தன. கடந்த ஏப்ரல் 8-ஆம் தேதி போர்நிறுத்தம் அமலுக்கு வந்த பின்னர், இஸ்ரேலை குறிவைத்து ஈரான் மேற்கொண்ட முதல் நேரடி தாக்குதல் இதுவாகக் கருதப்படுகிறது.
ஈரானில் இருந்து ஏவப்பட்ட ஏவுகணைகள் கண்டறியப்பட்ட உடனே, வான் பாதுகாப்பு அமைப்புகள் செயல்படுத்தப்பட்டதாக இஸ்ரேல் ராணுவம் தெரிவித்துள்ளது. இந்த தாக்குதலால் ஏற்பட்ட சேதங்கள் அல்லது உயிரிழப்புகள் குறித்து உடனடி தகவல்கள் வெளியாகவில்லை.
பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, காசா எல்லை பகுதியை இஸ்ரேல் தற்காலிகமாக மூடியுள்ளது. இதற்கிடையில், பெய்ரூட் மீது தாக்குதல் நடத்தப்பட்டால் பதிலடி கொடுக்கப்படும் என்று ஈரான் ஏற்கனவே எச்சரிக்கை விடுத்திருந்தது.
தெற்கு லெபனானில் இஸ்ரேல் மேற்கொண்ட ராணுவ நடவடிக்கைகளால், அமெரிக்காவுடன் நடைபெற்று வந்த மறைமுக பேச்சுவார்த்தைகளையும் ஈரான் நிறுத்தியிருந்தது. இந்த சூழ்நிலையில், பெய்ரூட்டின் தெற்கு புறநகர் பகுதிகளில் இஸ்ரேல் நடத்திய வான்வழித் தாக்குதல்களுக்கு சில மணி நேரங்களுக்குப் பிறகே ஈரான் ஏவுகணை தாக்குதலை மேற்கொண்டுள்ளது.
இதனால், மேற்காசிய நாடுகளில் பாதுகாப்பு மற்றும் அரசியல் ரீதியான பதற்றம் மீண்டும் அதிகரித்துள்ளது.
