வாஷிங்டன்: அமெரிக்காவும் ஈரானும் இந்த வார இறுதியில் ஐரோப்பாவில் அமைதி ஒப்பந்தத்தில் கையெழுத்திட உள்ளதாக அமெரிக்க அதிபர் Donald Trump தெரிவித்துள்ளார். எனினும், இதுதொடர்பாக எந்தவித இறுதி உடன்பாடும் எட்டப்படவில்லை என ஈரான் தரப்பு மறுப்பு தெரிவித்துள்ளது.
மத்திய கிழக்கு நாடான ஈரானுக்கு எதிராக புதிய தாக்குதல்களை மேற்கொள்ள மாட்டோம் என டிரம்ப் உறுதியளித்துள்ள நிலையில், வாஷிங்டனில் உள்ள வெள்ளை மாளிகையின் ஓவல் அலுவலகத்தில் செய்தியாளர்களிடம் அவர் இந்த தகவலை பகிர்ந்தார்.
அப்போது பேசிய டிரம்ப், அமெரிக்காவும் ஈரானும் ஐரோப்பாவில் அமைதி ஒப்பந்தத்தில் கையெழுத்திட உள்ளதாகவும், அமெரிக்காவின் சார்பில் துணை அதிபர் J. D. Vance பங்கேற்பார் என்றும் கூறினார்.
மேலும், இந்த ஒப்பந்தத்தின் ஒரு பகுதியாக அணு ஆயுதங்களை வைத்திருக்கக் கூடாது என்ற நிபந்தனைக்கு ஈரான் சம்மதித்துள்ளதாகவும், ஈரானின் ஆட்சித் தலைமை இந்த ஒப்பந்தத்திற்கு ஒப்புதல் வழங்கியுள்ளதாகவும் அவர் தெரிவித்தார். ஒப்பந்தம் கையெழுத்தான பின்னர் ஹார்முஸ் ஜலசந்தி திறக்கப்படும் என்றும் டிரம்ப் கூறினார்.
ஈரான் மீது நடத்தப்பட்ட கடுமையான தாக்குதல்களே அந்த நாட்டை பேச்சுவார்த்தைக்கு வர வைத்ததாகவும், ஈரானுடனான பிரச்னைக்கு சிறந்த தீர்வு எட்டப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.
ஆனால், டிரம்பின் இந்த அறிவிப்பை ஈரான் அதிகாரிகள் மறுத்துள்ளனர். பேச்சுவார்த்தைகள் இன்னும் நிறைவடையவில்லை என்றும், இதுவரை எந்தவொரு இறுதி ஒப்பந்தமும் எட்டப்படவில்லை என்றும் அவர்கள் தெரிவித்தனர்.
மேலும், ஈரான் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கும் வரை இந்த விவகாரம் தொடர்பாக டிரம்ப் வெளியிடும் தகவல்களை அவரது முந்தைய கருத்துகளைப் போலவே கருத வேண்டும் என்றும் ஈரான் தரப்பு கூறியுள்ளது.
